புகலிடம் கோரி ஆபத்தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்துள்ள 103 ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
இதன் காரணமாக அவர்களை தொடர்ந்தும் முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
இது குறித்து அவர், மேலும் தெரிவிக்கையில், ரோஹிங்கிய அகதிகள் நாடற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்களை எங்கு அனுப்புவது என்பது தொடர்பில் இதுவரை ஒரு தீர்மானமும் மேற்கொள்ள முடியாதுள்ளது.
அதேவேளை, இலங்கைக்குள் சட்ட ரீதியற்ற முறையில் நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் காரணமாக இவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாதுள்ளது.
எவ்வாறாயினும், ரோஹிங்கிய அகதிகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யுமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அத்துடன் இவர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜயபால மேலும் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 19ஆம் திகதி புகலிடம் கோரி ஆபத்தான கடல் பயணத்தின் ஊடாக வந்த இவர்கள் திருகோணமலைக்கு அண்மித்த கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் வந்த படகில் பணியாற்றிய 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Vidivelli
No comments:
Post a Comment