கப்பல் சுக்கான் புகைப்பட ஆடையணிந்த மஸாஹிமாவின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது : தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

கப்பல் சுக்கான் புகைப்பட ஆடையணிந்த மஸாஹிமாவின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது : தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்

2019ஆம் ஆண்டு “தர்­ம­சக்­கரம்” பதித்த ஆடையை அணிந்­தி­ருந்த­தாக குறிப்­பிட்டு பெண்­ணொ­ரு­வரை கைது செய்து அவரை தடுத்து வைத்­தமை ஊடாக அச­லக்க பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்பதிகாரியினால் அடிப்­படை மனித உரி­மையை மீறியுள்ளதாக உயர்­ நீ­தி­மன்றம் நேற்று (30) தீர்ப்­ப­ளித்­தது.

அவ்­வாறு கைது செய்­யப்­பட்ட கொலன்­டாவ பிர­தே­சத்தை வசிப்பிடமாக கொண்ட அப்துல் ரஹீம் மஸா­ஹிமா என்ற பெண் தாக்கல் செய்த மனுவை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்­டதன் பின்னர் குமு­தினி விக்­கி­ர­ம­சிங்க, ஷிரான் குண­ரத்ன ஆகிய நீதியரசர்­களின் இணக்­கப்­பாட்­டுடன் உயர் ­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் யசந்த கோதா­கொட இந்த தீர்ப்­பினை அறி­வித்தார்.

அதற்­க­மைய குறித்த பெண்ணை கைது செய்த அச­லக்க பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சந்­தன நிஷாந்த தனது தனிப்­பட்ட பணத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாவை மனு­தா­ர­ருக்கு செலுத்­து­மாறு நீதி­ய­ரசர் குழாம் அறி­வித்­துள்­ளது.

இந்த நட்­ட­யீட்டு தொகையை செலுத்­து­வ­தற்­காக பொலிஸ் திணைக்க­ளத்தின் நிதியம் அல்­லது பொலிஸ் கூட்டு நிதியம் பயன்படுத்­தப்­படமாட்­டாது என்­பதை பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்­துக்கு உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றும் நீதி­ய­ரசர் குழாம் அறி­வித்­துள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரி­மைகள் தொடர்­பான உடன்­ப­டிக்கை சட்­டத்தின் 3 (1) உறுப்­பு­ரையின் பிர­காரம் கைது செய்­யப்­படும்போது பின்­பற்­றப்­பட வேண்­டிய வழி­மு­றைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகை­யி­லான சுற்­ற­றிக்கை சட்­டமா அதி­பரின் அனு­ம­தி­யுடன் பொலிஸ் நிலையங்களுக்கு வெளி­யி­டு­மாறு உயர் ­நீ­தி­மன்றம் பொலிஸ்மா அதி­ப­ருக்கு பணிப்­புரை விடுத்­தது.

மனு­தாரர் சார்பில் மன்றில் முன்­னி­லை­யாகி இருந்த சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவாமான்ன மன்றில் விட­யங்­களை முன்­வைக்­கையில், எனது சேவை பெறுநர் தர்­ம­சக்­கரம் பொறித்த ஆடையை அணிந்ததற்­காக கைது செய்­யப்­பட்­ட­தாக குறிப்­பிட்டு பின்னர் அது கப்பல் சுக்­கானம் என குறிப்­பிட்­டார்கள்.

இதற்­க­மைய அது ஐக்­கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரி­மைகள் தொடர்­பி­லான உடன்­ப­டிக்கை சட்­டத்தின் பிரகாரம் கைது செய்­யப்­பட்டு சிறையில் தடுத்து வைப்­பது சட்டத்துக்கு விரோ­த­மா­னது என சுட்­டிக்­காட்­டினார்.

முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களை ஆராய்ந்த மூவ­ட­ரங்­கிய நீதியரசர் குழாம் இந்த கைதின் ஊடாக அச­லக்க பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி அடிப்­படை மனித உரி­மையை மீறி­யுள்­ள­தாக தீர்ப்ப­ளித்­தது.

2019ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி அன்று அச­லக்க பொலிஸ் பிரிவுக்குட்­பட்ட பகு­தியில் தர்­ம­சக்­கரம் பொறித்த ஆடையை இந்த மனு­தாரர் அணிந்­தி­ருந்­தாக கூறி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை கைது செய்து தடுத்து வைத்ததால் பொலிஸார் தனது அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி யசந்த கோதாகொட, நீதிபதி குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் உடன்பட்டு அடிப்படை உரிமைகள் விண்ணப்பத்தை அனுமதித்தனர்.

2019 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை பதுளை சிறைச்சாலையில் தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக  மனுதாரர்  குறிப்பிட்டுள்ளார்.

தனது உடையில் தம்மசக்கரத்திற்கு மாறாக  கப்பல் சக்கரம் ஒன்றே பொறிக்கப்பட்டிருந்ததாகவும்,  "எந்தவொரு இனத்தவரின் மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் வேண்டுமென்றோ அல்லது துன்புறுத்தும் வகையில் அவமதிப்பது எனது நோக்கம் இல்லை எனவும் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment