வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவர் இன்று (31) நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலக்கம் - 3 இன் நீதிபதி பசன் அமரசிங்க முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளான ஹேமசச்ந்திர பெரேரா மற்றும் பிரபாத் துமிந்த வீரரத்ன ஆகிய இருவரும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 314 மற்றும் 32 இன் கீழ் தரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும், அரச புலனாய்வு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'வெள்ளை வேன்' தாக்குதல் சம்பவத்தில், இருவரும் ஊடகவியலாளர்கள் மற்றும் தூதரக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் கடந்த 2017 இல் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 2023 இல் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
முக்கியமான சட்ட மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய சாட்சியங்களை முன்வைத்து சிரேஷ்ட சட்டதரணி ஷிராஸ் நூர்தீன் மற்றும் சட்டதரணி எம்.கே.எம். பர்சான் ஆகியோர் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சார்பாக வலுவான வாதங்களை முன்வைத்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்வர்கள் விடுவிக்கப்பட வழிவகுத்த முக்கிய அம்சங்கள்
1. சட்டவிரோதமான அடையாள அணிவகுப்பு
சந்தேகநபர்கள் ஊடகங்களில் காட்டப்பட்டதன் பின்னர் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டமை குறித்து வழக்கறிஞர்களின் வாதங்களை நீதிமன்றம் ஏற்றது.
2. சாட்சிக்கார்களின் முரணான சாட்சி
1ஆவது சாட்சிக்காரர் ஒருவர் பொதுமக்களில் சிலரை சந்தேகநபர்களாக அடையாளம் காட்டியதாக ஒப்புக் கொண்டார். மற்றைய சாட்சியால் சந்தேகநபர் எவரையும் அடையாளம் காண முடியவில்லை.
3. முறையான முறையில் மருத்துவ சான்று சமர்ப்பிக்கப்படவில்லை
உடல் காயம் ஏற்பட்டதைக் குறிக்கும் எந்தத் தகுதியான மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
4. உறுதிப்படுத்தப்பட்ட அலிபய்(Ali Bi)
1 வது சந்தேகநபர் தனது குழந்தையின் பிறந்தநாள் நிகழ்வு மற்றும் மத சடங்குகளில் கலந்து கொண்டதைக் காட்டுவதை குறிக்கும் புகைப்படங்கள் மூலம் சம்பவம் இடம்பெற்ற நாளில் சம்பவ இடத்தில் சந்தேகநபர் இல்லாததை சட்டதரணிகள் நிரூபித்தனர்.
நீதிமன்றமானது குற்றவியல் சட்டத்தின்படி நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் குறிப்பிட்ட குற்றத்தை அரச தரப்பினர் சார்பாக ஆஜராகிய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிரூபிக்க தவறியுள்ளதாகக் குறிப்பிட்டு இரண்டு புலனாய்வு அதிகாரிகளையும் விடுதலை செய்தது.
இது ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் வழங்கப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பாகும்.
விடியல்
No comments:
Post a Comment