புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இயலுமை அரசாங்கத்துக்கில்லை : தீர்வு கோரும் தமிழ் பிரதிநிதிகள் எதிர்ப்பை மாத்திரமே வெளியிடுகிறார்கள் - முன்னாள் நீதி அமைச்சர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 5, 2025

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இயலுமை அரசாங்கத்துக்கில்லை : தீர்வு கோரும் தமிழ் பிரதிநிதிகள் எதிர்ப்பை மாத்திரமே வெளியிடுகிறார்கள் - முன்னாள் நீதி அமைச்சர் தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல சட்டமூலங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம். இந்த சட்டமூலங்களைக்கூட இயற்றிக்கொள்ள முடியாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போகிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் இயலுமை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது என்று முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த நாட்டைத்தான் நாங்கள் பொறுப்பேற்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும், எனக்கும் இடையில் மாறுப்பட்ட தன்மை காணப்பட்டது. இருப்பினும் நாடு வங்குரோத்து நிலையடைந்த சந்தர்ப்பத்தில்தான் அவர் தனி மனிதனாக சவால்களை எதிர்கொண்டார். அவருக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த கடுமையான தீர்மானங்களினால்தான் நிதி வங்குரோத்து நிலையில் இருந்து நாடு குறுகிய காலத்துக்குள் மீட்சி பெற்றது. பொருளாதார காரணிகளை கருத்திற்கொள்ளாமல்தான் நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியிலான தீர்மானத்தை எடுத்தார்கள்.

நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு அரசியல் தரப்பினர் காரணம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அரசியல் கட்டமைப்பு ரீதியில் மக்கள் வெறுப்படைந்தார்கள். இதனால்தான் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

மக்களின் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையில் அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்துள்ளதால் ஆட்சியியல் கட்டமைப்பில் முரண்பாடான தன்மைதான் காணப்படுகிறது.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டாண்டு காலத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

தென்னாபிரிக்க மாதிரியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு வெளிப்படையான நடவடிக்கைகளை முன்வைத்து சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம். இந்த சட்டமூலத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஏதேனும் வகையில் கட்டம்கட்டமாக தீர்வு காணும் நோக்கம் தமிழ் பிரதிநிதிகளிடம் கிடையாது என்பதை வெளிப்படையாக குறிப்பிட முடியும். தீர்வு கோருகிறார்கள். ஆனால் முன்வைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பை மாத்திரமே வெளியிடுகிறார்கள்.

முழுமையான தீர்வு காலம் காலமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் கிடைக்கும் பகுதியளவிலான தீர்வுகளையும் அவர்கள் ஏற்கவில்லை. ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். பயங்கரவாதத்துக்கு விரிவான வரைவிலக்கணம் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு முதலாவதாக சமர்ப்பித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இன்றை காலகட்டத்தில் பயங்கரவாதத்தை ஒரு வரையறைக்குள் உள்ளடக்க முடியாது என்பதை எவரும் விளங்கிக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பல சட்டமூலங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றை இந்த அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும், அரசியலமைப்பு திருத்தத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அதற்கான பணிகள் விரிவாக ஆராயப்பட வேண்டும்.அதற்கு நீண்டதொரு காலம் தேவைப்படும்.

இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காது என்பது தெளிவாக தோன்றுகிறது. ஆரம்பகட்ட பணிகளை தற்போது ஆரம்பித்தால் இரண்டு ஆண்டுக்குள் யாப்பினை உருவாக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment