வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் வலியை ஏற்பதும், நீதியை வழங்குவதும் அவசியம் - நீதி அமைச்சர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 5, 2025

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் வலியை ஏற்பதும், நீதியை வழங்குவதும் அவசியம் - நீதி அமைச்சர் தெரிவிப்பு

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் துன்பத்துக்கு முகங்கொடுத்து வருகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதும், அவர்களுக்குரிய நீதியை வழங்குவதும், அவர்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதும் இன்றியமையாததாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்றது. அதன் நீட்சியாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இரண்டாவது தேசிய மாநாடு கடந்த ஜுன் மாதம் 25 - 27 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வேறு மாகாணங்களைச் சேர்ந்த, மாறுபட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 62 பேர் பற்கேற்றிருந்தனர்.

இம்மாநாடு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், காணாமல்போன தமது அன்புக்குரியவர்களைத் தேடும் பயணத்தில் முகங்கொடுத்துவரும் சவால்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு கூட்டாகக் கையாளமுடியும் என்பது பற்றியும் ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது.

தமது அன்புக்குரியவர்கள் எங்கே, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை மாநாட்டில் கலந்துகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சகலரும் வலியுறுத்தினர்.

அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது தேவைப்பாடுகள் குறித்தும், தற்போது நடைமுறையிலுள்ள பொறிமுறைகளின் செயற்திறன் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கு இம்மாநாட்டின் ஊடாக வாய்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி மாநாட்டில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் துன்பத்துக்கு முகங்கொடுத்து வருகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதும், அவர்களுக்குரிய நீதியை வழங்குவதும், அவர்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதும் இன்றியமையாததாகும் எனத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் செஞ்சிலுவை சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் பிரதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment