எஸ்.எம். முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரினால் கோறளைப்பற்று தெற்கு-கிரான் மற்றும் கோறளைப்பற்று மத்தி தொடர்பில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிபார்சு நியாயமற்றது என்பதுடன், கோறளைப்பற்று மேற்கு மற்றும் மத்தி பிரதேச செயலக மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியானதும் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடு என ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் ஊடக சந்திப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் இன்று (06) பிரதேச சபைக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அறிக்கை வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், பிரதேச சபைத்தவிசாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள 5 கிராம சேவகர் பிரிவுகளை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்துடன் மீண்டும் இணைக்கக் கோருதல்.
கீழ்வரும் விடயங்களை தங்களின் மேலான பரிசீலனைக்கும் நடவடிக்கைக்குமாக தயவுடன் சமர்ப்பிக்கின்றோம்.
2000.11.20 ஆந்திகதிய HA/DA/14/107ம் இலக்க அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அமைவாக, 2002 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கீழ்க் குறிப்பிடப்படும் இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டன.
1. கோறளைப்பற்று தெற்கு கிரான் - 550 சதுர கிலோமீற்றர்
2. கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை – 240 சதுர கிலோமீற்றர்
1943 ஆம் ஆண்டு கிராம சபையாக உருவாக்கப்பட்ட இவ்வுள்ளுராட்சி மன்றமானது, 1983ஆம் ஆண்டு 14 கிராம சேவகர் பிரிவுகளையும் 176 சதுர கிலோமீட்டர் பரப்பளவினையும் கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையாக மாற்றப்பட்டு, 1991 ஆம் ஆண்டு இப்பிரதேசம் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக பிரகடனம் செய்யப்பட்டு, 1993 ஆம் ஆண்டில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்த 210A கள்ளிச்சை, 210A/1 வடமுனை, 210A/2 ஊத்துச்சேனை, 210 வாகனேரி மற்றும் 210E புனானை மேற்கு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டதால் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பரப்பானது 31 சதுர கிலோ மீட்டருக்குள் சுருக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இப்பிரதேச சபையானது தற்காலிகமாக பிரிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகவே 176 சதுர கிலோ மீற்றர் பரப்பில் மாற்றங்கள் ஏதுமில்லாமல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
பிரிக்கப்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் தமக்கான பிரதேச செயலக சேவைகளுக்காக கிட்டிய தூரத்திலுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தினை கடந்து புதிதாக உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு 20 தொடக்கம் 40 கிலோ மீட்டர் தூர ஒரு வழிப்பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.
அதேவேளை, தற்போதைய சுருக்கப்பட்ட 08 கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குள் வதியும் மக்களும் பிரிக்கப்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள தமது விவசாய நிலங்கள், மேட்டுநிலப்பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, வதிவிடங்கள் மற்றும் ஏனைய தொழில் நடவடிக்கைகளுக்காகவும் நிர்வாகத் தேவைகளுக்காகவும் 14 கிலோமீட்ர் தூரம் பிரயாணம் செய்து தமது நிர்வாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தற்போதைய சுருக்கப்பட்டுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் 31 சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் காகித ஆலைக்கான ஒதுக்கம், விவசாய நிலங்கள், ஆற்றொதுக்கங்கள், சதுப்பு நிலங்கள் என்பவை நீங்கலாக வெறும் 08 சதுர கிலோமீட்டருக்குள் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்ட 7,500 அளவிலான குடும்பங்கள் மிக இட நெருக்கடி மிகுந்த சூழலுக்குள் வாழ்கின்றனர்.
இதனால் எமது இப்பிரதேசம் தொற்றுநோய்களும் சுகாதாரப்பாதிப்புக்களும் அதிகமாக அடையாளங் காணப்படும் பிரதேசமாகவுள்ளதோடு உளநல பாதிப்புக்கள் அதிகம் ஏற்படும் மக்களையும் கொண்டுள்ளது.
குறுகிய நிலப்பரப்பிற்குள் அதிக குடியடர்த்திக்கொண்ட பிரதேசமாக இருப்பதனால் குடியிருப்புக் காணியினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பாரிய காணி விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
தொழில் நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், அதிகளவான திண்மக்கழிவு உற்பத்தி, வெள்ளநீர் பாதிப்பு என்பவற்றால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்களும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. அத்தோடு, இப்பிரதேசத்திலிருந்த இயற்கையான குடிநீர் வளமும் 90 வீதம் மாசடைந்து விட்டது.
திண்மக்கழிவுகளை முறையாக முகாமைத்தும் செய்வதற்கும் அத்தியாவசிய பொதுத்தேவைகளுக்கும் அதிகரித்திருக்கும் சனத்தொகைக்கு தேவையான குடியிருப்பு நிலங்களையும் பெற்றுக்கொள்வதற்கு முடியாத சூழ்நிலை கடந்த இரு தசாப்தங்களாக இப்பிரதேசத்தில் நிலவுவதோடு, இனிவரும் காலங்களில் மக்கள் வாழத்தகுதியற்ற சுற்றுச்சூழல் சுகாதார பாதிப்புக்களை மிக அதிகளவாகக் கொண்ட பிரதேசமாக இப்பிரதேசம் மாறி விடும் அபாயமுள்ளது.
1999 ஆம் ஆண்டு பனம்பலன ஆணைக்குழு மேற்குறிப்பிட்ட புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பிரதேச மக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் ஏனைய தொடர்புபட்ட தரப்புக்களின் கருத்துக்கள் அபிப்பிராயங்களை பெற்றுக்கொள்வதற்கான வெளிப்படையான மற்றும் பரந்துபட்டதுமான வாய்யப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை.
அத்தோடு, அக்காலப்பகுதியல் நிலவிய யுத்த சூழல், உச்சமடைந்திருந்த இனமுரண்பாடு, நிர்வாக ரீதியான பாகுபாடு என்பவையும் அப்போது ஆதிக்கம் செலுத்திய பயங்கரவாத மற்றும் ஆயுதக்கலாசார சூழ்நிலைகளும் நியாயமான தேவைகளைப் பிரதிபலிக்கத் தடுத்துள்ளன.
2000 ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ச்சியாக செய்து வந்த கோரிக்கைகள், நியாயப்படுத்தல்கள் என்பவற்றை புறந்தள்ளி கடந்த 23 வருட காலத்தில் இப்பிரதேச செயலகங்களை வர்த்தமானி பிரகடனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
அத்தோடு, 2014 ஆம் ஆண்டில் பொது நிர்வாக உள்நாட்லுவல்கள் அமைச்சின் மேலதிகச்செயலாளர் தடகள அவர்களின் தலைமையிலான ஆணைக்குழுவினர் பிரிக்கப்பட்ட கள்ளிச்சை, புனாணை மேற்கு மற்றும் வாகனேரி ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகள் மீண்டும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவுடன் இணைந்திருக்க வேண்டிய அவசியத்தினைப் பரிந்துரைத்திருந்ததோடு, இதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயளாலர்களின் இணக்கப்பாடும் எட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் 24.06.2025 ஆந்திகதிய LND/GAZZ/DSDIV/2025 இலக்க தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பனம்பலன ஆணைக்குழுவின் சிபாரிசிற்கமைய கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவை வர்த்தமானிப்படுத்துவதில் மக்களின் எதிர்ப்பு எதுவுமில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், பரிசீலனைக்குழுக்கள் என்பவற்றிக்கு கடந்த 25 வருடகாலமாக இப்பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் ஆயிரக்கணக்கான ஆட்சேபனை மனுக்களை முன்வைத்து வந்துள்ளதோடு, இப்பிரதேச சபை 31.12.2020 அன்று இறுதியாகச் சமர்ப்பித்த அறிக்கையின் பிரதியும் இத்துடன் இணைக்கப்படுகின்றது.
நாட்டை கடந்த கால கசப்புணர்வுகளிலிருந்து மீட்டெடுத்து புதிய அரசியல், சமூக, நிர்வாகக்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மாண்புமிகு ஜனாதிபதியும் அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படும் இக்காலத்திலும் மதிப்பிற்குரிய மாவட்ட செயலாளர் அவர்கள் தங்களுக்குத் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதும் நியாயமற்றதுமான சிபாரிசினை முன்வைத்து தங்களை பிழையாக வழிநடாத்த முயற்சித்திருப்பதும் இப்பிரதேச மக்களுக்கு அநியாயமிழைக்கவும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயற்பட்டிருப்பது சகல மட்டங்களிலும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்க செயற்பாடாகவுமுள்ளது.
யுத்தகால நெருக்கடி சூழலில் இப்பிரதேச மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் வழங்காது கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திலிருந்து பிரித்து கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கென தற்காலிகமாக இணைக்கப்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளையும் மீண்டும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுடன் இணைத்து பொதுமக்கள் நியாயமானதும் இலகுவானதுமான அரச சேவைகளை தமது காலடியில் பெற்றுக்கொள்ள வாய்ப்பினை வழங்குமாறு இப்பிரதேச மக்கள் சார்பாகவும் இப்பிரதேச சபை சார்பாகவும் விநயமுடன் தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
மாவட்ட செயலாளர் அவர்கள் தங்களுக்குத் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதும் நியாயமற்றதுமான சிபாரிசினை முன்வைத்து தங்களை பிழையாக வழிநடாத்த முயற்சித்திருப்பதும் இப்பிரதேச மக்களுக்கு அநியாயமிழைக்கவும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயற்பட்டிருப்பது சகல மட்டங்களிலும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்க செயற்பாடாகவுமுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி. பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment