சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் 2025.05.04 ஆம் திகதி இடம்பெற்ற கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.
அதனால் மாணவர்களாக, ஆசிரியர்களினதும் பெற்றோரினதும் அறிவுரைகளை மனதுக்கு எடுத்து, ஒரு நாளில் பெருமைப்படக் கூடிய ஒரு மரபை விட்டுச் செல்லும் வகையில் வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக இருக்க பாடுபட வேண்டும் என்று அவர் ஊக்குவித்ததுடன், தேர்தல் இலாபங்களை மாத்திரம் கவனம் செலுத்தும் பாரம்பரிய அரசியல்வாதிகளாக மாறுவதற்கு பதிலாக, எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் நெறிமுறைகளைக் கொண்ட தலைவர்களாக மாறுவதை மாணவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கலந்து கொண்ட மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய, குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைவர் ஹேமலி வீரசேகர, இந்த நாட்டில் பெண்களைப் பற்றிய கலாசார ரீதியாக வேரூன்றிய பிம்பம், பெண்கள் மீதான சமூக அணுகுமுறைகள், பயிற்சி மற்றும் அனுபவமின்மை, அத்துடன் முக்கியமாக பெண்கள் மீது சுமத்தப்படும் குடும்பப் பொறுப்புகள் ஆகியவை பெண்கள், குறிப்பாக கிராமப்புற மட்டத்தில், முன்னேறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும், இலங்கை சட்டவக்கத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஓரளவுக்கு அதிகரித்துள்ளது என்றும், அது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக அரசியலில் பின்னடைவு நிலைமைகள் இருந்தபோதிலும், பல பெண்கள் இதுபோன்ற சவால்களை சமாளித்து தங்கள் இலக்குகளை அடைந்துள்ளனர் என்பதற்கான உதாரணங்களை சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்றம், பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கினார்.
தற்போதைய பாராளுமன்றம் வரலாற்றில் மிக அதிக பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம், எதிர்காலப் பெண் தலைவர்களுக்கு முன்மாதிரிகளை வழங்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், இந்த நாட்டில் பெண்கள் தலைமைத்துவத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கு மாணவர் பாராளுமன்றம் ஒரு சிறந்த தளம் என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம ஜயலத் பெரேரா குறிப்பிடுகையில், மாணவர் பாராளுமன்றம் போன்ற வேலைத்திட்டங்கள் நல்ல ஆளுமையுடனான தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதால், எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது எனத் தெரிவித்தார்.
அதனையடுத்து மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடங்கியதுடன், இதன் போது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர் அமைச்சர்களினால் தமது அமைச்சுக்களினால் பாடசாலையில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைத்தனர்.
மாணவர் பாராளுமன்ற அமர்வை அடுத்து கௌரவ பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் ஏனைய அதிதிகளினால் மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பளார் நாயகம் தர்மசிறி கமகே, உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடத்தின் அதிபர் மேரி மெடோனா விமலதாச மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment