(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியல் தலையீடுகள் இன்றி இதுவரை காலமும் செயற்பட்டு வந்த இளைஞர் சேவை மன்றத்தை அரசாங்கம் அரசியல்மயமாக்கி மக்கள் விடுதலை முன்னணி இளைஞர்களை அதன் பிரதான பதவிகளுக்கு நியமிக்கப்படுவதுடன் ஏற்கனவே பதவிகளில் இருப்பவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 6ஆம் திகதி இளைஞர்கள் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சி, தேசிய சேவை சங்க இளைஞர் சேவை மன்றத்தின் உப செயலாளர் ஷாயா லக்மினி தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய இளைஞர் சேவை மன்றம், அன்று முதல் ஆட்சியாளர்களின் எந்த அரசியல் தலையீடும் இடம்பெறவில்லை.
இளைஞர் சேவை மன்றத்தில் நாடு பூராகவும் உள்ள இளைஞர்கள் அங்கத்துவம் வகித்து வருகின்றனர். அவர்களில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். என்றாலும் இளைஞர்கள் என்ற அடிப்படையில் இந்த மன்றம் அதில் அங்கத்துவம் வகிக்கின்ற இளைஞர்கள் ஒற்றுமையாகவே பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்து வருகின்றனர்.
ஆனால் தற்போது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இளைஞர் சேவை மன்றத்தை மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைக்கு ஏற்ற வகையில் கொண்டுசெல்லவும், அவர்களின் இளைஞர்களை பதவிகளுக்கு அமர்த்தவும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்த மன்றங்களில் பிரதான பதவிகளில் இருந்தவர்களை பதவி விலகுமாறும் அல்லது அவர்கள் சொல்வதுபோன்று செயற்படுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச அரசியல்வாதிகளால் அழுத்தங்கள் பிரயோகிகப்படுகின்றன. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறுபவர்கள், தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றப்படுகின்றனர்.
நாட்டின் இளைஞர்களுக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இதுவரை காலமும் செயல்பட்டு வந்திருக்கிறது. இளைஞர் யுவதிகள் தங்கள் திறமைகள், ஆற்றல்கள், சேவைகள் மற்றும் செயல்முனைப்பு மூலம் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் நோக்கி முன்னேறும் வாய்ப்பைத் கொடுத்துக் கொண்டிருந்த தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்துக்கு இன்று அரசியல் தடையாக அமைந்து காணப்படுகிறது.
தமது திறமையாலும் ஆற்றலாலும் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை செல்வதற்கு இளைஞர்களுக்கு காணப்பட்டு வந்த வாய்ப்பு இன்று இல்லாதுபோயுள்ளது.
அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்படுபவர்களே இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றன. எம்.பி.க்களும், அமைச்சர்களும் அனுப்பும் பட்டியல்கள் மூலம் நியமனங்களைச் செய்யும் கீழ் மட்டத்திற்கு இந்த அரசாங்கம் தற்போது வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் இளைஞர் சேவை மன்ற இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிவர்வரும் 6ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு முன்னால் நாடு பூராகவும் இருக்கும் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஒன்றுணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment