காத்தான்குடி நகர சபை அமர்வுகளில் வெளிப்படைத்தன்மையை பேணும் நோக்கில், அரச தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் என நகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் ஆணையை பெற்ற நகர சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
காத்தான்குடி நகர சபையின் முதல் (கன்னி) அமர்வின்போது, தவிசாளரின் தனிப்பட்ட முடிவின்பேரில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி, சபை ஊழியர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அமர்வு முடிந்த பின்னர், சபையில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றி ஊடகவியலாளர்கள் தவிசாளரிடம் கேள்வி எழுப்பியது, “காத்தான்குடி கடற்கரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதியோரமாக உள்ள கடைகளை அகற்றுவதற்கு 18 உறுப்பினர்களும் பூரண ஆதரவுடன் தீர்மானம் செய்தனர்” என்ற கருத்தை தவிசாளர் தெரிவித்தார்.
இவ்வாறு சபையில் பேசப்படாத விஷயங்கள் குறித்து தவிசாளர் வெளியிடப்பட்ட கருத்துக்கு எதிர்வினையாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசைத் தவிர்ந்த தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஆகிய 7 உறுப்பினர்கள் கூட்டாகக் கையொப்பமிட்டு, சபையின் வெளிப்படைத்தன்மையை பேணும் வகையில் மக்கள் வழங்கிய ஆணையின் பெருமானத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், “மக்கள் ஆணையின் பெருமானத்தை பேண வேண்டியது அவசியம்” என்ற அடிப்படையில் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பிரதிகள், கிழக்கு மாகாண உள்ளூராட்சி அதிகார சபை ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தொடர்புடைய பிற அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment