இன்று (04) முதல் அமெரிக்கா தமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் 170 இற்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது சிரமம் என குறிப்பிட்டுள்ள அவர், கட்டம் கட்டமாக 10 நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பவுள்ளதாகவும், 20% முதல் 30% வரையிலான வரி வீதங்கள் விதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அது தவிர சில நாடுகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பெரும்பாலான நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் நேரடியாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட குறைவாக, சுமார் 100 நாடுகளுக்கு 10% வரிகள் வரை விதிக்கப்படவுள்ளதாக, அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்கொட் பெசெண்ட் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய வர்த்தகக் கூட்டாளிகள் உயர் வரிகளுக்கு முகம்கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20%, இந்தியாவுக்கு 26%, ஜப்பானுக்கு 24% வரி விதிக்கப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த புதன்கிழமை வியட்நாமுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்த ட்ரம்ப், அதில் வியட்நாமிய பொருட்களுக்கான அமெரிக்க வரிகளை அவர் முன்னர் அறிவித்த 46% இலிருந்து 20% ஆகக் குறைப்பதாக குறிப்பிட்டிருந்தார். பல அமெரிக்க பொருட்கள் வரி இன்றி வியட்நாமிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment