நேஷன் லங்கா பினான்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கியின் தொடர்பாடல் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி (Nation Lanka Finance PLC – NLFP) நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறி/மறுத்து வந்திருக்கின்றது.
மேலும், நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் பணத்தை கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.
நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளுடனும் அதன் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் விதிகளுடனும் இணங்கி நடக்குமாறு நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இற்கு இலங்கை மத்திய வங்கியினால் பல தடவைகள் கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டபோதிலும் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் நெருக்கடி நிலைமைகளை மாற்றியமைக்கும் விதத்தில் திருப்திகரமான முன்னேற்றங்கள் அடையவோ அத்தகைய ஏற்பாடுகள் பணிப்புரைகள் மற்றும் விதிகளுக்கு இணங்கும் வகையிலான திருப்திகரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இற்கு பல ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் திருப்திகரமான முன்னேற்றம் இல்லாத காரணத்தால், 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2025.07.04 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி மீது தீர்மான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி பற்றிய நிதிசார் மற்றும் நிதிசாரா நிலைமைகளின் முழமையான மதிப்பீடொன்றின் விளைவாகவும் இனங்காணப்பட்ட பிரச்சனைகளை சீர்செய்வதற்கு கம்பனிக்கு போதிய வாய்ப்பினை வழங்கிய பின்னரும் இத்தீர்மான நடவடிக்கையினைத் தொடங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
மேற்கண்டவற்றின் அடிப்படையில், தீர்வு செயல்முறைக்கமைய வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இற்கு நிர்வாகியொருவரை நியமிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.
அதற்கமைய, 2025.07.04 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ஆறு மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் நிர்வாகியாக பி.டபிள்யூ.டி.என்.ஆர் ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகி, நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் அனைத்து சொத்துகள், உரிமைகள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்கள் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்று, நிறுவனத்தின் பெயரிலும் அதன் சார்பிலும் அதன் வியாபார நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்களை முன்னெடுப்பார்.
கம்பனியின் தற்போதைய நிதியியல் நிலைமை மேலும் சீர்குலைவிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, தீர்வு அதிகாரியாக செயல்படும் இலங்கை மத்திய வங்கி, வைப்பாளர்களினதும் கடன்கொடுநர்களினதும் நலன்களைப் பாதுகாக்கவும், நிதி முறைமையின் நிலைத்தன்மை மற்றும் நேர்மையினைப் பேணவும் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
கம்பனி மீது நிதியியல் கடப்பாடுகளைக் கொண்டுள்ள நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் அனைத்து பங்குதாரர்களும் உரிய ஒப்பந்தங்களுக்கமைவாக கம்பனிக்கான அவர்களது ஒப்பந்தக் கடப்பாடுகளை நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் பெயரின் கீழ் வங்கிக் கணக்கொன்றின் ஊடாக மாத்திரம் உரிய காலத்தில் நிறைவுசெய்யுமாறும் அனைத்து கொடுப்பனவுகளுக்கான பதிவுகளைப் பேணுமாறும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.
மேலும் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி இன் அனைத்துப் பங்குதாரர்களும் இது தொடர்பில் மத்திய வங்கியுடன் ஒத்துழைக்குமாறு தயவுடன் கோரப்படுகின்றனர்.
மேலதிகத் தகவல்கள் பொருத்தமானவாறும், பொருத்தமான போதும் இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment