தலைவராக தெரிவு செய்யப்பட்டார் எஸ்.எம். மரிக்கார் : அஜித் பி பெரேராவின் இராஜினாமாவை தொடர்ந்து நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 14, 2025

தலைவராக தெரிவு செய்யப்பட்டார் எஸ்.எம். மரிக்கார் : அஜித் பி பெரேராவின் இராஜினாமாவை தொடர்ந்து நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தக் குழுவின் தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி கடந்த 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

அதற்கமைய, புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவு செய்யப்பட்டார். 

அப்பதவிக்கு அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான வழிமொழிந்தார்.

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் விடயப் பொறுப்புக்கு மூன்று அமைச்சுக்களின் கீழுள்ள 50 நிறுவனங்கள் உள்ளடங்குவதாக குழுவின் புதிய தலைவர் தெரிவித்தார். 

அதனால் குழுவின் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். 

அத்துடன், தேவைக்கு அமைய உப குழுக்களை நியமித்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் குழுவில் இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், எதிர்காலத்தில் இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், அது தொடர்பில் விரைவாக குழுவில் கலந்துரையாடுவது முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான நலீன் பண்டார ஐயமஹ, மஞ்சுள சுரவீர ஆராச்சி, ரவீந்திர பண்டார மற்றும் சாந்த பத்மகுமார சுபசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment