தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் - ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 6, 2025

தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் - ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின்போது இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால திட்டமிடல்கள் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசியலமைப்பினால் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக செயற்படுகிறோம்.

09 மாத காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்று மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தி முடித்தோம். இந்த தேர்தல்களில் ஒரு சில குறைபாடுகளை அவதானித்துள்ளோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் அமைச்சரவை உப குழுக்களிடம் வலியுறுத்தி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.

தேர்தல் முறைமையில் நாட்டு மக்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடக்கிறது. வாக்களித்து விட்டோம் என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலானவர்கள் உள்ளதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முறைமையில் மக்கள் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்றார்.

No comments:

Post a Comment