சம்பூரில் மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 21, 2025

சம்பூரில் மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

கிண்ணியா நிருபர் - கியாஸ்

திருகோணமலை - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மெக் எனப்படுகின்ற மிதிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு வெள்ளிக்கிழமை (18) மிதிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்று (20) அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி இடைநிறுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மூதூர் நீதிமன்றின் அனுமதியை பெற்றதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுவதோடு, குறித்த பகுதியில் இருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment