நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள் : 5 கோடி ரூபா இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 8, 2025

நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள் : 5 கோடி ரூபா இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சந்திரமுகி’ பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், Netflix நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃளிலிக்ஸ் OTT தளத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் ‘நானும் ரவுடிதான்’ பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, 1 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல் ‘சந்திரமுகி’ பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், ஆவணப் படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், ரூ. 5 கோடி (இந்திய மதிப்பில்) இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பியும், இன்னும் அவற்றை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஆவணப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். ஆவணப்படத்தின் மூலம் ஈட்டிய இலாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, டார்க் ஸ்டூடியோவுக்கும், Netflix நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment