மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விடாதீர்கள் : மனித உரிமைகள் ஆணையாளரிடம் வலியுறுத்திய மனோ கணேசன் - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, June 25, 2025

demo-image

மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விடாதீர்கள் : மனித உரிமைகள் ஆணையாளரிடம் வலியுறுத்திய மனோ கணேசன்

511263634_1094097172866081_4278594278939797865_n%20(Medium)
ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்தபோது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்துவிட்டது. 

இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்குவரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப் பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. 

ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐ.நா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன். 

இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக  மலையக தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம், தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் 51 வது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன்.

இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும்போது, தவறாமல் இலங்கையின் வட, கிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தும்படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன்.

இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழவில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *