ஆதம்பாவா எம்.பி.யின் முயற்சியில் இழப்பீடு வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 17, 2025

ஆதம்பாவா எம்.பி.யின் முயற்சியில் இழப்பீடு வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்த்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள், தொழில் முயற்சிகள் பாரியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (16) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது வீடுகள் பாதிக்கப்பட்டவர்கள் 45 பேரும் தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் 17 பேரும் என மொத்தம் 62 பேருக்கு 2,144,641.19 ரூபா பணம் காசோலைகளாக விநியோகிக்கப்பட்டன.

அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.எம்.எம். அர்சாத் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.

இழப்பீடு தொடர்பாக விமர்சனங்கள் வந்த போதும், இழப்பீடு வழங்குவதனை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சரியாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகள் எடுத்து இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்த தாகவும் தெரிவித்த அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.எம்.எம். அர்சாத், ஓரிருவர் பேச்சுக்களைக் கேட்டு சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைக்காமல், தீர விசாரித்து எழுதுமாறு வேண்டிக் கொண்டதோடு, நானும் சாய்ந்தமருதூரான்தான் எனவும் தோணாவைப்பற்றி விமர்சனம் எழுதும் நேரத்தினை அத்தோணாவை துப்பரவு செய்வதில் (சிரமதானம் செய்வதற்கு) செலவிட்டால் தோணா துப்பரவாகிவிடும் எனவும் இங்கு பேசும் பொழுது சுட்டிக்காட்டிப் பேசினார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஜ. முஆபிகா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, நிர்வாகப் பிரிவு பிரதம முகாமையாளர் ஏ.சீ. முஹம்மட், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பிரத்தியேக செயலாளர் எஸ். இம்தியாஸ் மற்றும் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஆரிப் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment