அரச சேவையில் தற்பொழுது நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் அது சம்பந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தலைமையில் உப குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலில் அண்மையில் (24) இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
தற்பொழுது நடைமுறையிலுள்ள பொதுநிர்வாக சுற்றுநிருபம் 6/2006 மற்றும் 3/2016 என்பவற்றின் மூலம் அரச சேவையில் சம்பளம் தொடர்பான விடயங்கள் தீர்மானிக்கப்படுவதாகவும், அரச சேவையில் பல்வேறு பதவிகளுக்கான கடமைகள் திட்டவட்டமாக இல்லை என்பதும், பல்வேறு முரண்பாடுகள் மற்றும் பொருத்தமின்மைகள் காரணமாக அதிருப்தியான நிலைமையினால் இது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டதாக இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய, அரச சேவையின் தொழிமுறையை உயர்த்துவதற்கு தற்பொழுது காணப்படும் பதவிகள் மற்றும் அவற்றுக்கான கடமைகள், சம்பள அளவு போன்றவை தொடர்பில் விஞ்ஞானரீதியாக மீளாய்வுக்குப் பின்னர் ஒட்டுமொத்த அரச சேவைக்கு புதிய சம்பள அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளை இந்த உப குழுவின் மூலம் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட நிர்வாகத் துறையுடன் சம்பந்தபந்தப்பட்ட சிக்கல்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அதற்கமைய, அதற்கான தலையீட்டை விரைவாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment