பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்க அனுமதி : சைகை மொழி உரை பெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை : மாதிவெல உறுப்பினர் வீட்டுத் தொகுதியை புனரமைக்க அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்க அனுமதி : சைகை மொழி உரை பெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை : மாதிவெல உறுப்பினர் வீட்டுத் தொகுதியை புனரமைக்க அனுமதி

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற பணியாட் தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறித்த குழு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், பாராளுமன்றத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சைகை மொழியிலான உரை பெயர்ப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் பாராளுமன்ற பணியாட் தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அமைய இயலாமையுடைய பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலதன முதலீட்டு நிதியத்தின் (Commonwealth Parliamentarians with Disabilities (CPwD) Capital Investment Fund) அனுசரணையுடன் பாராளுமன்றக் குழு அறைகள் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சைகை மொழியிலான உரை பெயர்ப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

பாராளுமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 

இதற்கு அமைய பாராளுமன்றக் கட்டடத்தின் கூரைகளின் பீலிகளைப் புனரமைத்தல், பிரதான செப்புக் கதவின் சுமுகமான செயற்பாட்டுப் பொறிமுறையை மீளுறுதிப்படுத்தல், பாராளுமன்ற சுகாதார வசதிகளை விஸ்தரித்தல், தீயணைப்புக் கட்டமைப்பை (Fire Detection System) நிறுவுதல் போன்றவை முன்னுரிமையளிக்கப்பட்ட விடயங்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இவற்றை இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கும் குழு அனுமதி வழங்கியது.

மேலும், மாதிவெல உறுப்பினர் வீட்டுத் தொகுதியைப் புனரமைப்பதற்கும் குழு அனுமதி வழங்கியது. இதற்கு அமைய 2025ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு மற்றும் உரிய கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கு அமைய இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய நீர் விநியோகக் கட்டமைப்பை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைப்பதற்கும் குழுவின் அனுமதி கிடைத்தது. 

இதற்கு அமைய, இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணியை மேற்கொள்ள முன்மொழியப்பட்டிருப்பதுடன், பாராளுமன்ற வழங்கல் மற்றும் சேவைகள் பிரிவினால் பரிந்துரைக்கப்பட்ட கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி திறந்த கொள்முதல் செயல்முறை மூலம் இரண்டு சூரிய சக்திக் கட்டமைப்புக்கள் அமைக்கப்படவுள்ளன.

அதேநேரம், பாராளுமன்ற வளாகத்திற்கு நுழையும் பின்னியர நுழைவாயிலின் பாதுகாப்புக் கட்டடம் மற்றும் வீதி விஸ்தரிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பாராளுமன்ற பணியாட் தொகுதி ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 

குறித்த கட்டுமானத்திற்காக 67 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், சபாநாயகரின் பரிந்துரைக்கு அமைய, பிரதான திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு அமைய மேற்குறித்த தொகையை 3 மில்லியன் ரூபா வரை குறைக்க முடிந்துள்ளதுடன், அதன் கட்டுமானப் பணிகளை இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, பின்னியர பிரதான கட்டடத்திற்கு மேலதிகமாக கௌரவ உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களின் பாதுகாப்பு பரிசோதனையை எளிதாக்கும் வகையில் மேலதிகப் பாதுகாப்பு அறையை நிர்மாணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்கப் பொதுநிர்வாகச் சுற்றறிக்கை 06/2006ற்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட் தொகுதியினரின் சம்பள மறுசீரமைப்பு மற்றும் வசதிகளை நிர்ணயிக்கவும் சாபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்பட்ட மூவரடங்கிய வெளிப்புற நிபுணர்கள் குழுவுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க குழுவின் செயலாளர், கணினி இயக்குனர், நிர்வாக உதவியாளர் போன்றவர்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், பாராளுமன்றத்திற்குச் சொந்தமான ஸ்ராவஸ்தி மாளிகையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்குப் பெற்றுக் கொடுப்பது குறித்தும் பாராளுமன்ற பணியாட் தொகுதி ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியது. 

இதற்கு அமைய, ஸ்ராவஸ்தி கட்டட வளாகத்தில் ஏதேனும் ஒரு தரப்பினருக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏற்கனவே இருந்தால், அதை ஒரு மாத காலத்திற்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நினைவூட்டல் கடிதத்தை அனுப்புமாறு குழு செயலாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியது.

நிலையியற் கட்டளை 121 (5) (I) இன் கீழ் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிக்கைகளைத் தயாரிக்க நிபுணர்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்க கொடுப்பனவுகளை மேற்கொள்ள பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியது. இது அரசாங்க நிதி பற்றிய குழுவின் உரிய அனுமதிக்கு அமைய மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment