குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அனுமதி : 2023 இல் இழப்பீடு வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை கோரிய குழு : மூன்று அரசாங்க நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் குழுவில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அனுமதி : 2023 இல் இழப்பீடு வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை கோரிய குழு : மூன்று அரசாங்க நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் குழுவில் அனுமதி

பாராளுமன்றத்தில் 2025.05.23 ஆம் திகதி (இன்று) சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்துக்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க தலைமையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதில் நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த அதிகாரிகள் இந்த சட்டமூலத்தை அவசியத்தை விளக்கியதுடன், நீதிமன்ற வளாகத்துக்கு சந்தேகநபர்களை கொண்டுவராமல், நேரடி ஒலி/ ஒளி தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களை இணைத்துக் கொள்ளல் மற்றும் மின்னஞ்சல் மூலம் சந்தேகநபர்களுக்கு அழைப்பாணை அனுப்புதல் என்பவற்றுக்கு சந்தர்ப்பம் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய, குற்றவாளிகள் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் ஏற்படும் உயிர் அச்சறுத்தல்களை குறைத்துக் கொள்ளல் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் பாரிய நிதியை இதன்மூலம் சேமிக்க முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அதனையடுத்து இந்த சட்டமூலத்துக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளுக்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், இதன்போது இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், இழப்பீடுகள் வழங்கும் போது 2023 இல் கோரிக்கை விடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

2023 இற்கு முன்னர் இழப்பீடு வழங்க வேண்டியவர்களுக்கு குறைந்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது குழு சுட்டிக்காட்டியது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் அதிகாரிகளிடம் குழு வினவியது.

இந்த இழப்பீடுகள் பொது மக்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அவ்வாறு 142 நபர்களுக்கு 753 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய, இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நபர்கள், வழங்கப்பட்டுள்ள தொகை மற்றும் வழங்கப்பட்ட திகதி உள்ளடங்கலான அனைத்துத் தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை ஒரு வாரத்துக்குள் குழுவுக்கு வழங்குமாறு குழு அறிவுறுத்தியது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் குறித்த ஆண்டறிக்கைகளை மீண்டும் கருத்திற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான சந்தன சூரியஆரச்சி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, தர்மப்ரிய விஜேசிங்ஹ, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் எம்.கே.எம். அஸ்லம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன், குழுவின் தலைவரின் அனுமதியுடன், குழுவின் உறுப்பினர்களல்லாத அஜித் பி. பெரேரா, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் மற்றும் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment