சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 21, 2025

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

காசாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அந்தப் பகுதிக்கு தடையின்றி உதவிகள் செல்ல அனுமதிக்கும்படி இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றபோதும் தொடரும் சரமாரித் தாக்குதல்களில் நேற்றைய (20) தினத்திலும் 70 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

காசா முழுவதும் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு இதில் இரு வீடுகள் மீது இடம்பெற்ற குண்டு வீச்சில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடம்பெயர்ந்த குடும்பங்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை மீது தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு நகரான கான் யூனிஸ் மீது முன்னேப்போதும் இல்லாத தாக்குதல் பற்றி எச்சரித்த இஸ்ரேல் இராணுவம் அங்குள்ள மக்களை வெளியேறும்படி கடந்த திங்களன்று உத்தரவிட்டிருந்தது.

காசா நகரில் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்று தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அந்த இடிபாடுகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்கள் தேடுதலில் ஈடுபடும் காட்சிகளை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அருகிலுள்ள அஹ்லியா வைத்தியசாலையில் வெள்ளை துணியால் போர்த்திய உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் ஆண்கள் தொழுகை நடத்தினர்.

‘நாம் செய்த தவறு என்ன? குழந்தைகள் செய்த தவறு என்ன? தீயில் கருகி உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள் செய்த தவறு என்ன?’ என்று பாடசாலையில் அடைக்கலம் பெற்றிருக்கு ஒமர் அஹ்லி ரோய்ட்டர்ஸ் செய்து நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் கடந்த எட்டு நாட்களில் 500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்தவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த திங்கட்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் வெறும் அரை மணி நேரத்தில் குறைந்தது 38 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய போர் விமானங்கள் கிழக்கு காசா நகரில் உள்ள பாடசாலை ஒன்று மற்றும் மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாமில் கைவிடப்பட்ட நிலையில் மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று உட்பட பல இடங்களிலும் தாக்குதல்களை நடத்தியதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 290 பேர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரி தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 53,573 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா நாடுகள் அதிர்ச்சியை வெளியிட்டு இஸ்ரேலை எச்சரித்திருக்கும் நிலையிலேயே தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. காசாவுக்கு உதவிகள் செல்வதற்கான கட்டுப்பாட்டை தளர்த்;தி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் படை நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் ‘கடுமையான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று இந்த நாடுகள் எச்சரித்துள்ளன.

‘இஸ்ரேலின் தீவிர நடவடிக்கையால் நாம் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புறேன்… போர் நிறுத்தம் ஒன்றுக்கான எமது கோரிக்கையை நாம் மீண்டும் விடுக்கிறோம்’ என்று பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டமர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை ஸ்டமர், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இஸ்ரேல் போரை விரிவுபடுத்தி இருப்பது முற்றிலும் சமநிலைபோக்கு அற்றது என்று குறிப்பிடப்பட்டது.

‘காசாவில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை விரிவுடுத்தி இருப்பதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். காசாவில் மனிதர்கள் படும் வேதனை சகிக்க முடியாதது’ என்று இந்தத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் நடவடிக்கையையும் இந்த கூட்டு அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது. ‘இஸ்ரேல் சட்டவிரோதமான குடியேற்றங்களை நிறுத்த வேண்டும். இலக்கு வைக்கப்பட்ட தடைகள் உட்பட மேலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு தயங்க மாட்டோம்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காசா முழுவதையும் கைப்பற்றும் இலக்குடனேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். அதேபோன்று காசா பகுதிக்கான அனைத்து விநியோகங்களும் கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் முடக்கப்பட்ட நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மனிதாபிமான உதவிகள் முறையாக எட்டப்படாதபட்சத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் வரை உயிரிழக்கக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் மனிதாபிமான தலைவர் டொம் பிளட்சர் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

No comments:

Post a Comment