(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம் பேசி வருகிறது. திருடர்கள் என தெரிவித்தவர்களுடன் இவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என கேட்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அ' அட்டவணையின் ஒழுங்கு விதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், அரசாங்கம் மக்களுக்கு இதுவரை காலமும் தெரிவித்து வந்த பொய்களுக்கு மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதிலளித்திருக்கின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் 68 இலட்சமாக இருந்த வாக்குகளை இந்த தேர்தலில் 45 இலட்சம் வரை அரசாங்கம் குறைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போதாவது பொய் கூறுவதை நிறுத்தி அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது.
அதேபோன்று அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்க முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமமாக இருக்கின்றன. அதனால் மற்றவர்களின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை தவிர அனைவரையும் திருடர்கள் என தெரிவித்த இவர்கள், தற்போது எப்படி மற்றவர்களின் ஆதரவை பெற முடியும்?
அதேபோன்று கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பதற்கும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. அதனால் தற்போது உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள மில்லியன் கணக்கில் பேரம் பேசப்பட்டு வருகிறது. அதிகாரத்தை பெற்றுக் கொள்ள எவ்வாறு திருடர்களுடன் ஒன்றிணைய முடியும்?
அம்பாந்தோட்டை பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்காக தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை பெலவத்த காரியாலயத்துக்கு அழைத்து கலந்துரையாடி இருப்பதாக எமக்கு தெரியவருகிறது.
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இருக்கிறது. மில்லியன் கணக்கில் கொடுத்தே அவர்களை எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு இந்தளவு பணம் எங்கிருந்து கிடைக்கிறது. அதிகாரத்துக்காக பணம் வழங்க முடியுமா?
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியையே மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதன் பிரகாரம் நாங்கள் செயற்படத் தயாராக இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் அனைவரையும் திருடர்கள் என்றே தெரிவித்தார்கள். திருடர்களுடன் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க இவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. என்றாலும் அரசாங்கம் எப்படியாவது கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைத்து, அவர்களின் வீழ்ச்சியை மறைப்பதற்கே முயற்சிக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment