பாலியல் இலஞ்சம் கோரிய அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திஸ்ஸமஹாராமவில் 7 வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்காக, மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரிடம் (வயது 30) குறித்த அரச உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளார்.
அத்துடன் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் இந்த தண்டனை 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், பிரதிவாதியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த, நோயால் பாதிக்கப்பட்ட தனது 7 வயது பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கத்தின் நிதி உதவியைப் பெறுவதற்கான அனுமதி வேண்டிச் சென்ற தாயிடம், திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.
இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் அந்த தாய் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பின்னர் அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அந்த தாய், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரால் அழைத்துச் செல்லப்பட்டபோது மடக்கிப்பிடித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
அரச உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டு பெண்ணிடம் சந்தேகநபர் பாலியல் இலஞ்சம் கோரியதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, இலேசான தண்டனை விதிக்க முடியாது என்பதை கருத்திற்கொண்டு இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment