முன்னாள் விவசாய அமைச்சருக்கு விளக்கமறியல் : தரமற்ற சேதன உரக் கப்பலுக்கு பணம் செலுத்திய சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 19, 2025

முன்னாள் விவசாய அமைச்சருக்கு விளக்கமறியல் : தரமற்ற சேதன உரக் கப்பலுக்கு பணம் செலுத்திய சம்பவம்

கடந்த அரசாங்க காலத்தில் விவசாய அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற சேதன உரக் கப்பலுக்கு பணம் செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய அவரை கைது செய்ய கடந்த மே மாதம் 16ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, இலஞ்சம், ஊழல் விசாரணைக்கும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் பேரில், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த பிடியாணையை பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய, இன்றையதினம் (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையான மஹிந்தானந்த அலுத்கமகேவை மே மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முன்னதாக, தாம் கைது செய்யப்படலாம் எனும் ஐயம் காரணமாக, முன்பிணை கோரி அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த மனுவை கடந்த மே மாதம் 14ஆம் திகதி எடுத்துக் கொண்ட கொழும்பு பிதான நீதவான் தனூஜா லக்மாலி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்பி, இன்றையதினம் (19) நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை முன்வைக்குவமாறு உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகளை இன்றே (19) ஆரம்பிக்குமாறு தமது சட்டத்தரணிகள் ஊடாக மஹிந்தானந்த அலுத்கமகே சீராக்கல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இன்று முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான், மே மாதம் 26 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் வரும் நாட்களில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment