டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படை நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அழைப்பின் பேரில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் குறித்து ஆராய, சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில், அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
தொற்றுநோயியல் பிரிவு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக, இந்தக் கலந்துரையாடலின்போது, இரத்தினபுரி மருத்துவமனை தொடர்பாக சமீபத்திய நாட்களில் அறிவிக்கப்பட்ட நிலைமை மற்றும் ஆபத்து நிறைந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைமை ஆகியவை மிக ஆழமாக ஆராயப்பட்டன.
இங்கு, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படை நடைமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு மேலும் பல முடிவுகளும் இங்கு எடுக்கப்பட்டன.
குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்குக் தெளிவு படுத்துவதற்கு திட்டங்களை மிக விரைவாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஹசித திசேரா மற்றும் அந்தத் துறைகளில் பணிபுரியும் விசேட வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் கடந்த 17 வாரங்களில் நாட்டில் 18,749 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இடைவிடாது பெய்யும் மழை காரணமாக வரும் நாட்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறியது.
குறிப்பாக (கொழும்பு நகர சபைப் பிரிவுக்குள்) கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், இந்த மாதம் (மே) விசெட நுளம்பு கட்டுப்பாட்டு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, நாட்டின் பல்வேறு இடங்களில் சிக்குன்குனியா நோயாளிகளின் போக்கு காணப்படுவதாகவும், டெங்குவின் பரப்பிகளான ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போஜிக்டஸ் போன்ற நுளம்பு இனங்களால் சிக்குன்குனியாவும் பரவுகிறது என்றும் இந்த அறிவிப்பு மேலும் அறிவுறுத்துகிறது.
எனவே, வீடுகளையும் வளாகங்களையும் சுத்தமாக வைத்திருப்பது டெங்கு மற்றும் சிக்குன்குனியா இரண்டையும் கட்டுப்படுத்த உதவும்.
எந்தவொரு சூழலிலும் இந்த நுளம்புகள் பெருகும் அபாயம் இருப்பதால், வீடுகள் உட்பட அனைத்து பகுதிகளையும் வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காலையிலும் மாலையிலும் நுளம்பு கடிப்பதைத் தவிர்க்க உடலை மூடும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியையோ அல்லது தகுதி வாய்ந்த மருத்துவரையோ அணுக வேண்டும் என்றும், காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் அறிவுறுத்துகிறது.
No comments:
Post a Comment