நீண்டதூர பஸ் சாரதிகளுக்கு கட்டாய ஓய்வு நேரம் அவசியம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 13, 2025

நீண்டதூர பஸ் சாரதிகளுக்கு கட்டாய ஓய்வு நேரம் அவசியம்

கொத்மலை - கெரண்டியெல்ல பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, நீண்ட தூர பஸ்களில் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு நேரத்திற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் நாயகம் வழக்கறிஞர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடினமான வீதிகளில் இரவில் மேற்கொள்ளப்படும் நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து சேவைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கதிர்காமம் - குருநாகல் போக்குவரத்து என்பது, அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்ளும் போக்குவரத்து சேவையாகும். 

இதுபோன்ற பயணங்களில் ஈடுபடும் பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு நேரத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். 

இதுபோன்ற நீண்ட தூர பயணத்திற்கு முன் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சரியான ஓய்வு கிடைக்குமா? அதற்குத் தேவையான வசதிகள் பஸ் நிலையங்களால் வழங்கப்படுகின்றனவா? அவர்கள் பயணத்தின்போது ஏதேனும் இடைவேளை எடுக்கிறார்களா? என்பதையும் நாங்கள் கவனித்துள்ளோம்.

மேலும், போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய, விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு, தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த உதவி ஆணையர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment