கடந்த 8 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த வன்முறைகள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பிய அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பின்வரும் முக்கியமான கேள்விகளை எழுப்பினார்.
துப்பாக்கிச் சூடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் எங்கே?
நாட்டளவில் இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் போதுமானதா என்பதையும், அது இல்லை என்றால், தடுப்பதற்கான புதிய திட்டத்தை சபையில் முன்வைக்குமாறும் கேள்வி எழுப்பப்பட்டது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கம்
வன்முறை அதிகரிப்பது தேசிய பாதுகாப்பை பாதிப்பதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தும். இதற்காக அரசாங்கம் எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளது என்றும், இதற்கான நடவடிக்கைகள் எவை என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
போதைப் பொருள் மற்றும் அதன் தாக்கம்
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் ஏற்படும் மோதல்களில் பொதுமக்கள் பலியாகின்றனர். இதன் அடிப்படையில், அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்து, அதற்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து விளக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அரசியல்வாதிகள் மீது அச்சுறுத்தல்கள்
பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளின் நிலை என்ன? என்பன குறித்து விளக்கம் கோரப்பட்டது.
இந்த விடயங்களில் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment