(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பிரதமர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஸ்னைபர் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல் போலியானது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விடுக்கப்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. டுபாய் நாட்டில் தலைமறைவாகியுள்ள கஞ்சிப்பானை இம்ரானின் வழிநடத்தலுக்கு அமைய தேசபந்துவை கொலை செய்வதற்கு புஸா சிறைச்சாலையில் உள்ள சுத்தா என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தொலைபேசி தரவுகள் ஊடாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த விடயம் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டு, சுத்தா என்ற கைதியை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் ஊடாக உ யிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் முறைப்பாடளித்துள்ளது. ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் ஐ.பி இலக்கத்துடன் தொடர்புடையதாக இந்த மின்னஞ்சல் முகவரி காணப்படுகிறது. இந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான தகவல்களை உரிய நிறுவனத்திடம் கோரியுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் மீது ஸ்னைபர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், லொகு பெடி என்பவர் இதனுடன் தொடர்புடையதாகவும் கடந்த வாரம் பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த விடயம் குறித்து விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. ஒரு தரப்பினர் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் போலியான வகையில் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment