இலத்திரனியல் உபகரணங்களுக்குள் சூட்சுமமாக மறைத்துக் கொண்டுவரப்பட்ட குஷ் போதைப் பொருளுடன் 3 பெண்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இலத்திரனியல் உபகரணங்களுக்குள் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 12 கிலோ நிறையுடைய குஷ் போதைப் பொருளுடன் இலங்கையைச் சேர்ந்த 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குஷ் போதைப் பொருளுடன் வர்த்தகர்களுக்கான விசேட பாதையினுடாக வெளியேற முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கொழும்பு கொலன்னாவையைச் சேர்ந்த 46 வயதுடைய தாயும் அவரது 18 வயதுடைய மகளும் ஆவார். மற்றைய பெண் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 56 வயதுடைய வியாபாரத்தில் ஈடுபடும் பெண் ஆவார்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (19) மாலை 06.30 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸில் 6 இ - விமானம் 1174 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் இந்த போதைப் பொருள் தொகையை தாய்லாந்தில் இருந்து வாங்கி, AC மற்றும் மின்சார உணவு தயாரிப்பு உபகரணங்கள் 7 இல் நுணுக்கமாக மறைத்து, இந்தியாவின் சென்னை நகருக்கு வந்து, பின்னர் அங்கிருந்து திங்கட்கிழமை (19) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலைய சி.சி.ரி.வி. கமெராக்களை பரிசோதித்த சுங்க அதிகாரிகள் குறித்து 3 பெண்களும் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இதே முறையில் போதைப்பொருட்களை நாட்டுக்கு கடத்திக் கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களையும் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment