(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற திகதி வரையான காலப்பகுதியில் 2250.04 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளததென பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ரவீந்திர பண்டார தனது கேள்வியில், 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு, இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படட திகதி வரை அச்சிடப்பட்ட பணத்தின் பெறுமதி எவ்வளவு? மேற்படி காலப்பகுதியில் ஒவ்வொரு நிதி அமைச்சின், ஜனாதிபதியின் கீழ் அச்சிடப்பட்ட பணத்தின் பெறுமதி எவ்வளவு? மேற்படி காலப்பகுதியில் ஏதேனும் ஒரு காலத்தில் கட்டுப்பாடின்றி பணம் அச்சிடப்பட்டுள்ளதா? அவ்வாறு பணம் அச்சிடப்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் என்னவென்று கேட்டிருந்தார்,
அதற்கு பிரதியமைச்சர் பதிலளிக்கையில், ஜனவரி 2015 முதல் 2024 ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற திகதி வரையான காலப்பகுதியில் அச்சிடப்பட்ட நாணயத்தாள் மற்றும் நாணயங்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் கூற்றின் பிரகாரம் 2015ஆண்டு மொத்தமாக 255.35 பில்லியன் ரூபா, 2016ஆம் ஆண்டு 358.35 பில்லியன் ரூபா, 2017ஆம் ஆண்டு 162.39, பில்லியன் ரூபா, 2018ஆம் ஆண்டு 66.25 பில்லியன் ரூபா, 2019ஆம் ஆண்டு 276.50, பில்லியன் ருபா, 2020ஆம் ஆண்டு 225,00பில்லியன் ரூபா, 2021ஆம் ஆண்டு 262.35 பில்லியன் ரூபா, 2022ஆம் ஆண்டு410.95 பில்லியன் ரூபா, 2023ஆம் ஆண்டு 232.90 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிதி அமைச்சரின் பதவிக் காலத்திலும் 2015 முதல் ஜனாதிபதித் தேர்தல் திகதி 2024 வரை அச்சிடப்பட்ட நாணயத் தாள்களின் மதிப்பு மற்றும் நாணயங்களின் மொத்த தொகை, நிதி அமைச்சர்களான ரவி கருணாநாயக்கவின் கீழ் 646.17 பில்லியன் ரூபா, மங்கள சமரவீரவின் கீழ் 472.75 பில்லியன் ரூபா, மஹிந்த ராஜபக்ஷ்வின் கீழ் 487.35 பில்லியன் ரூபா, பசில் ராஜபக்ஷ்வின் கீழ் 201.50 பில்லியன் ரூபா, ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் 442.35 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஜனாதிபதியின் காலத்திலும் (2015 முதல் 2024 வரை) அச்சிடப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் நாணயங்களின் மதிப்பு, மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் 1,118.92 பில்லியன் ரூபா, கோட்டாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் 688.70 பில்லியன் ரூபா, ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் 442.35 பில்லியன் ரூபா.
இந்த புள்ளிவிவரங்கள், அந்தந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் பணம் அச்சிடுவதற்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் தகவல்களைக் காட்டுகின்றன. அத்துடன் எந்தக் காலகட்டத்திலும் கட்டுப்பாடற்ற முறையில் பணம் அச்சிடப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment