வட மாகாணத்தில் சுற்றுலாத் துறையை வினைத்திறனாக்க நடவடிக்கை மேற்கொள்க - வலியுறுத்திய ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, May 9, 2025

வட மாகாணத்தில் சுற்றுலாத் துறையை வினைத்திறனாக்க நடவடிக்கை மேற்கொள்க - வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையை வினைத்திறனாக இயங்கச் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

எனவே வடக்கில் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களிலும் பிரத்தியேகமாக சுற்றுலா அலகுகளை நிறுவ நடவடிக்கை எடுப்பதுடன் அதற்குரிய ஆளணி வளங்களையும் வழங்கி வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரைந்து மேம்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது அரசிற்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறை அமைச்சரின் கவனத்திற்கு தற்போது சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானத்திலேயும் இலங்கை முழுவதும் தங்கியுள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் நாகப்பட்டினம் படகு சேவையினூடாக வருகை தருகின்றனர்.

சுற்றுலா சார்பான விடயங்கள் முனைப்புப் பெற்றிருக்கும் நிலையில் இவை சார்பாக அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் நிர்வாக ரீதியாக மாவட்டச் செயலகங்களில் பிரத்தியேகமாக சுற்றுலா அலுவலகங்கள் (Tourism Unit or Office) இல்லை. மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் சுற்றுலா அபிவிருத்திக்கான உத்தியோகத்தர்கள் இல்லை.

சுற்றுலாசார் அபிவிருத்தி செயற்பாடுகள், அலுவலகர்களால் மேலதிக நிர்வாகக் கடமையாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதேநிலைமை மாகாண சபைகளில் குறிப்பாக உள்ளூராட்சி சபைகளிலும் காணப்படுகின்றன.

எமது வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களும், மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதிகளும் தனித்துவமான இயற்கை மற்றும் கலாசார வளங்களை கொண்டுள்ளன.

மேலும் மரபுரிமை மையங்கள், பாரம்பரிய உணவுகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை சந்தைப்படுத்துவதற்கு சுற்றுலாத்துறைக்கு பலமான நிர்வாக அலுவலகமும் ஆளணியும் தேவை.

இதற்கென புதிய அலுவலர்கள் உள்வாங்கப்பட வேண்டும். அவ்வாறு உள்வாங்கப்படும் புதிய அலுவலர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் பயன்படுத்தக்கூடிய வகையில் எமது மாகாணத்திலுள்ள மாவட்டச் செயலகங்களில் சுற்றுலா அலகுகளை உடனடியாக நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்தோடு இவ்வாறு மாவட்ட செயலகங்களில் நிறுவப்படுகின்ற சுற்றுலா அலகுகளுக்கு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான அபிவிருத்தி உத்தியோகத்தரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் வினைத்திறனான முறையில் சுற்றுலாத்துறையை செயற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment