(எம்.மனோசித்ரா)
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, காலி, மாத்தறை, திருகோணமலை, கல்முனை மற்றும் குருணாகல் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தென்மேல் பருவ பெயர்ச்சி காலநிலையுடன் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் சூழலில் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
இதன் காரணமாகவே மே மாதம் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அதற்கமைய 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் 40,108 சுற்றுச்சூழல் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இவற்றில் 10,613 இடங்கள் நுளம்புகள் பெருகக் கூடியவாறு காணப்படுகின்றன. இது நூற்றுக்கு 25 சதவீதமாகும்.
நான்கில் ஒரு சூழல் டெங்கு நுளம்பு பரவக்கூடியவாறு அபாயம் மிக்கவையாகக் காணப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு மக்களை அறிவுறுத்துவதாக டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment