தற்காலிக இடைநிறுத்தம் தீர்வைப் பெற்றுத்தராது, வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட வேண்டும் - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 21, 2025

தற்காலிக இடைநிறுத்தம் தீர்வைப் பெற்றுத்தராது, வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட வேண்டும் - சுமந்திரன்

(நா.தனுஜா)

வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் என மீளவலியுறுத்தியுள்ளார்.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும் எவரேனும் காணிகளுக்கான உரிமையை நிறுவுவதற்கு தவறும் பட்சத்தில் அல்லது காணிகளுக்கு உரிமை கோராதவிடத்து, அக்காணிகள் கட்டாயமாக அரசுடைமையாக்கப்பட வேண்டும் என காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 5 (1) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே அரசாங்கம் அறிவித்துள்ளவாறு தற்காலிக இடைநிறுத்தம் எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனவும், ஆகையினால் மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment