தேசபந்து விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைக்க பொலிஸ் குழு : மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 26, 2025

தேசபந்து விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைக்க பொலிஸ் குழு : மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக்குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கையிட நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த விசாரணைக்குழு இரண்டாவது தடவையாக நேற்றையதினம் (25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன், இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேலதிக சொலிசிட்டர் நாயகம் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் நாயகம் ரஜித பெரேரா ஆகியோர் சட்ட மாஅதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால விசாரணைச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் விசாரணைக்குழுவின் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்கு நாளை மறுதினமும் (28) மீண்டும் கூடுவதற்கும் இக்குழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை, மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில், கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை பெற்று விடுதலையான தேஷபந்து தென்னகோன், நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மீறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) அறிவித்திருந்தது.

அன்றையதினம் தமது வாகனத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்து.

நீதிமன்ற அவமதிப்புக்காக தமது நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாததால், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யமாறு சட்ட மா அதிபருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் செய்யப்பட்ட சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், தென்னகோன் நீதிமன்ற அவமதிப்புச் செயலைச் செய்துள்ளார் என் நீதவான் தீர்மானித்து அதற்கேற்ப உத்தரவைப் பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அளித்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது நடத்தையை விவரிக்கும் ‘B’ அறிக்கையை இதற்காக அவர்கள் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

ஏப்ரல் 10 ஆம் திகதி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு BMW வாகனத்தை கொண்டு வந்து தேசபந்து தென்னகோன் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. 

இது நீதிமன்றத்தின் நிபந்தனைகளை வெளிப்படையாகப் புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அரசு தரப்பு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் நாயகம் தீலிப பீரிஸ், இந்தச் செயல் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு கடுமையான அவமதிப்பை ஏற்படுத்துவதாக வாதிட்டார்.

மேலும், சம்பந்தப்பட்ட வாகனம் முதலில் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய பாதுகாப்புப் பணியாளர்களால் மறுக்கப்பட்டதாகவும், பின்னர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலையீட்டைத் தொடர்ந்து அவ்வாகனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன் பிறகு தென்னக்கோன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளின்படி, அங்கீகரிக்கப்படாத நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என நீதிபதி குறிப்பிட்டார். 

எனவே, வாகனத்தை உள்ளே செல்ல அனுமதி வழங்கி சந்தேகநபரை அழைத்துச் செல்ல அனுமதிப்பது நீதித்துறைக்கு எதிரான அவமதிப்புச் செயலாக புலப்படுவதாக நீதவான் குறிப்பிட்டார்.

அதற்கமைய, நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனத்தை கொண்டு வந்ததாகக் கூறப்படும் தேசபந்து தென்னகோன் மற்றும் ரொஷான் லக்ஷித கருணாரத்ன ஆகிய இருவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment