இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான நான்காவது மீளாய்வு குறித்த அலுவலர் மட்ட (Staff Level) உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியம் எட்டியுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் வருடாந்த பொதுக்கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், சர்வதேச நாணய நிதியம் (IMF) பின்வரும் அறிக்கையை (https://www.imf.org/en/News/Articles/2025/04/25/pr25122-sri-lanka-imf-reaches-sla-on-the-4th-review-under-the-eff) வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு அமைய, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியால் (EFF) ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் நான்காவது மீளாய்வை நிறைவு செய்யும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான அலுவலர் மட்ட உடன்படிக்கையை IMF அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர்.
இதற்கு IMF நிறைவேற்றுச் சபை (Executive Board) அனுமதி வழங்கினால், 344 மில்லியன் அமெரிக்க டொலரை பெறுவதற்கான வாய்ப்பை இலங்கை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள் ஒட்டு மொத்தமாக வலுவாகவே காணப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சி மீளெழுச்சியடைகின்றது. அரசிறைத் திரட்சி, வருவாய் சேமிப்பு, கட்டமைப்புசார் மாற்றங்கள் ஆகியன எதிர்பார்த்தபடி முன்னேற்றம் காண்கின்றன. படுகடன் மறுசீரமைப்பு பெரும்பாலான அளவில் நிறைவடைந்துள்ளது.
ஆனால், உலகளாவிய வர்த்தக கொள்கையின் நிச்சயமற்ற தன்மைகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியவையாக காணப்படுகின்றன. இவற்றின் விளைவுகள் கண்டறியப்படுமானால், அவற்றை மதிப்பீடு செய்யவும், கொள்கை ரீதியான தீர்வுகளை உருவாக்கவும், IMF மற்றும் இலங்கை அதிகாரிகள் இணைந்து செயற்படுவார்கள்.
கொழும்பு மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் வருடாந்த பொதுக்கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், சர்வதேச நாணய நிதிய குழுவின் தலைவர் (IMF Mission Chief) இவான் பாபகேர்ஜியோ (Evan Papageorgiou) வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்களை தெரிவித்துள்ளார்.
“IMF இன் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஏற்பாட்டின் கீழ், நான்காவது மீளாய்வு குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளோம். இந்த திட்டத்தின் மொத்த நிதிய உதவித் தொகை சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) 2.3 பில்லியன் (3 பில்லியன் டொலர்) ஆகும். இதற்கான அனுமதி 2023 மார்ச் 20ஆம் திகதி IMF நிறைவேற்றுச் சபையினால் வழங்கப்பட்டது
இந்த மீளாய்வு இரு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
மின்சார செலவுக்கேற்ப கட்டணம் அறவிடல் மற்றும் தன்னியக்க விலை நிர்ணய கட்டமைப்பை செயற்படுத்துதல்.
பல்வேறு பங்காளர்களிடமிருந்து உறுதியான நிதியுதவி மற்றும் படுகடன் மறுசீரமைப்பில் போதிய முன்னேற்றம்.
நிறைவேற்று சபையின் மீளாய்வு நிறைவடைந்தால், இலங்கை SDR 254 மில்லியனை (சுமார் 344 மில்லியன் டொலரை) பெறும். இதன் மூலம் தற்போதுவரை பெறப்பட்ட மொத்த தொகை SDR 1.27 பில்லியனாக (சுமார் 1.722 பில்லியன் டொலராக) அதிகரிக்கும்.
2024ஆம் ஆண்டு பொருளாதாரம் 5% வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்திறன் 2022 இல் 8.2% இருந்து, 2024 இல் 13.5% ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு ஒதுக்குகள் மார்ச் இறுதியில் 6.5 பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது.
நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாற்றமானது ஒட்டு மொத்த அடிப்படையில் தொடர்ந்தும் வலுவாகக் காணப்படுகின்றது. பூர்வாங்கத் தரவுகளின் அடிப்படையில், தரவுகள் கிடைப்பனவாகவுள்ள அநேகமான மார்ச் இறுதியளவிலான அளவுசார் இலக்குகள் நிறைவுசெய்யப்பட்டன. ஏப்ரல் இறுதியளவில் நிலுவையிலிருந்த அநேகமான கட்டமைப்புசார் அளவுகோல்கள் நிறைவுசெய்யப்பட்டு அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக இருந்தன. பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குட்பட்டே உள்ளது. சில கொள்கை மாற்றங்கள், குறிப்பாக மின்சார கட்டணம் தொடர்பானவை, இன்னும் நிறைவேறவில்லை. வங்கி மையங்கள் நன்கு மூலதனப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியல் உறுதிப்பாட்டும் சமூகப் பாதுகாப்பும்
தற்போது நிலவும் நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்காக, வரவு செலவுத் திட்டம், ஊழல் தடுப்பு, நன்கு இலக்கீடு செய்யப்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை மிகவும் அவசியமானவை.
ஏழை மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கத்திடமே உள்ளது. வரி சலுகைகள் நன்கு வடிவமைக்கப்பட்டு, அரச நிதியில் இழப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.
அதற்கமைய, இலங்கையின் புதிய அரசாங்கம் EFF திட்டத்திற்கான உறுதிப்பாட்டை தொடர்வது நம்பிக்கையையும் கொள்கைத் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்துகின்றது. ஊழல் தடுக்கும் நீடித்த சீர்திருத்தங்கள், கடின உழைப்பின் மூலம் அடைந்த மேம்பாடுகளை நிலைநிறுத்த உதவும்.
IMF குழுவானது நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட சிறந்த கலந்துரையாடல்களின் போதான ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் IMF குழுவின் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment