திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா குறித்த கட்டளையை நேற்று (02) பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டவர் கிண்ணியா - கட்டையாறு மதரஸா வீதியில் வசித்துவரும் 38 வயதான ஜவ்பர் ரிஸ்வான் எனவும் தெரியவந்துள்ளது.
கிண்ணியா கட்டையாறு பகுதியில் மத்ரசாவிற்கு செல்லும்போது சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றில் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு (02) திறந்த நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.
மதரசாவிற்கு சென்று கொண்டிருந்த மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் ரூ. 1500 தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் கட்டளையிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 10,000 நஷ்டயீடாக வழங்குமாறும் அதனை கட்ட தவறினால் 6 மாத கால சிறைத் தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்ட பணத்திலிருந்து 20% செலுத்த வேண்டும் எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நமது தீர்ப்பில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment