பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது குழந்தை சடலமாக மீட்பு : இனம் தெரியாத நபர் தூக்கிச் சென்றமை CCTV இல் அம்பலம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 23, 2025

பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து 3 வயது குழந்தை சடலமாக மீட்பு : இனம் தெரியாத நபர் தூக்கிச் சென்றமை CCTV இல் அம்பலம்

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 3 வயது மதிக்கத்தக்க முஹம்மத் லுக்மான் என்ற ஆண் பிள்ளை பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் போயிருந்த குறித்த சிறுவனை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸாரும் தேடிய நிலையில் அச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் இச்சிறுவன் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா? என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப் பெற்ற CCTV காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபரொருவர் குறித்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது. அத்துடன் குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பது குறித்தும் குழப்பமான ஒரு நிலையும் காணப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனுடன் உடனிருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் 11 வயது சிறுவனிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச. ஜெயலத் தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment