(நா.தனுஜா)
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதானது அவர்கள் பதவியிலிருந்த காலப்பகுதியில் வழங்கிய தீர்ப்புக்களின் நேர்மைத்தன்மையை சந்தேகத்துக்கு உட்படுத்துவதுடன், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் சரிவை ஏற்படுத்தும் என சட்டத்தரணிகள் கூட்டிணைவு கரிசனை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சட்டத்தரணிகள் கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஓய்வு பெற்ற நீதிபதிகளை, அதிலும் குறிப்பாக உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்களை தற்போது அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளுக்கு நியமிப்பதானது சட்டத்துறை சார்ந்தோர் உள்ளடங்கலாக நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதிகளின் இத்தகைய நியமனங்கள், அவர்கள் பதவியிலிருந்த காலப்பகுதியில் வழங்கிய தீர்ப்புக்களின் நேர்மைத்தன்மையை சந்தேகத்துக்கு உட்படுத்துவதுடன், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் சரிவை ஏற்படுத்தும்.
குறிப்பாக நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் இடம்பெறக்கூடிய இவ்வாறான நியமனங்களின் விளைவுகள் மேலும் மோசமானவையாக இருக்கும். இருப்பினும் இதன் அர்த்தம் நீதிபதிகளின் அறிவும், அனுபவமும் அவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் வீணாக வேண்டும் என்பதல்ல.
ஆனால் அவர்கள் நீதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டிருக்கக்கூடுமா? என்ற சந்தேகத்தை தோற்றுவிக்காத வகையில் அவர்களது அறிவும், அனுபவமும் நாட்டின் நலனுக்காக உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
அதேவேளை ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசியலமைப்புப் பேரவையின் ஊடாக, உரிய செயன்முறையைப் பின்பற்றி சட்ட ஆணைக்குழு உள்ளிட்ட கட்டமைப்புக்களின் தவிசாளர்களாகவோ, விசாரணை ஆணைக்குழுக்களின் தலைவர்களாகவோ நியமிக்கப்படுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
அதுமாத்திரமன்றி சட்டக் கல்வி மற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகளுக்கான பயிற்சி வழங்கல் என்பவற்றுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்த முடியும்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட நன்மைகள், சேவைக்காலத்தில் அவர்கள் பெற்ற நன்மைகளுக்கு சமனானதாக அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் ஊடாக அனுமதியளிக்கப்பட்டவை தவிர்ந்த நிதி அல்லது ஏனைய நலன்களைப் பெற்றுத்தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என சட்டத்தரணிகள் கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment