மின் மாபியாக்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது : வீட்டு பெண்களை இலக்கு வைத்தே தேசிய மக்கள் சக்தி தேர்தலில் பொய்யுரைத்தது - எஸ்.எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

மின் மாபியாக்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது : வீட்டு பெண்களை இலக்கு வைத்தே தேசிய மக்கள் சக்தி தேர்தலில் பொய்யுரைத்தது - எஸ்.எம்.மரிக்கார்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மின் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தேர்தல் காலத்தைப்போன்று இன்றும் ஆளும் தரப்பு 75 ஆண்டு கால அரசியலை விமர்சித்துக் கொண்டுள்ளது. மின் மாபியாக்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, மின் பிறப்பாக்கியில் குரங்கு தாவியதால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் இதுவரையில் உண்மையான காரணம் வெளியிடவில்லை. ஆகவே இனி குரங்கு கதையை குறிப்பிடும்போது ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் மீதான வரியை குறைப்பதாகவும், அதனைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் மின் கட்டணத்தை குறைப்பதாகவும் ஆளும் தரப்பு தேர்தல் காலத்தில் குறிப்பிட்டது. ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்து விட்டது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? இல்லை.

ஆசியாவில் குறைந்த மின் கட்டணம் உள்ள நாடாக இலங்கையை மாற்றியமைப்பதாக குறிப்பிட்டீர்கள். செய்தீர்களா, இல்லை. ஆசியாவில் அதிக மின் கட்டணம் உள்ள நாடாக இலங்கை காணப்படுகிறது. 254 சதவீதமாக மின் கட்டணம் காணப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னர் 75 ஆண்டு கால அரசியலை விமர்சித்தீர்கள். மக்களை தவறாக வழிநடத்த பல வாக்குறுதிகளை வழங்கினீர்கள். ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வழமைபோல் 75 ஆண்டு கால அரசியலமை விமர்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

மின் கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஏதுமில்லை. இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் பிரதான மின்மாபியா என்று குறிப்பிடப்பட்டது.

கடந்த பாராளுமன்றத்தில் கோப் குழுவுக்கு மின்சார சபை அழைக்கப்பட்டபோது மின்சார சபையின் பல விடயங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கோப் குழுவில் இருந்தார். அவரும் எதிர்ப்பு தெரிவித்தார். இன்று மின் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அரசாங்கமும் மின் மாபியாக்களுக்க அடிபணிந்து விட்டதா ?

வீட்டு பெண்களை இலக்காகக் கொண்டே தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் பொய்யுரைத்தது.

அநுர ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் குறையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறையும் என்று வீட்டு பெண்கள் நம்பி வாக்களித்தார்கள். இதுவரையான காலப்பகுதியில் அடிப்படை பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு வழங்கியுள்ளீர்கள்.

தேர்தல் காலத்தில் முதல்தர பொய்யை குறிப்பிட்டு முதல் தரத்துக்கு வந்தீர்கள். மக்களை தவறாக வழிநடத்தினீர்கள். இதன் கர்ம வினை நிச்சயம் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என ஆளும் தரப்பினரை நோக்கி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment