1972 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் - அமைச்சர் குமார ஜயகொடி - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

1972 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் - அமைச்சர் குமார ஜயகொடி

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக இந்த ஆண்டு 1972 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். எரிபொருள் ஊடான மின்னுற்பத்தியை வரையறுத்து, நீர் மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் செயலாற்றுகையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மின்சாரத்துறை அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வலுசக்தி துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், முறையாக விநியோகிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் ஊடாக மின்னுற்பத்தியை வரையறுத்துக்கொண்டு நீர் மின்னுற்பத்தி ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தை 2026 ஆம் ஆண்டுகளில் முழுமைப்படுத்திக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள மின்னுற்பத்தி மையங்களின் சேவைகளை வினைத்திறனாக்குவதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறை சபையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை ரீதியில் தீர்வு எட்டப்படும்.

எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடாக மின்னுற்பத்தியை இயலுமான அளவு குறைத்துக் கொள்வதற்கு விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாட்டுக்கு புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக இந்த ஆண்டு 1972 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment