(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பெருந்தோட்ட மக்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெருந்தோட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியை விரட்டியடிப்பார்கள். மலையகத்தை அரசாங்கம் இழக்கும். பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனத்திற் கொள்ளாமல் இருப்பதை தட்டிக்கேட்க தற்றுணிவு இல்லாதவர்களாகவே ஆளும் தரப்பின் மலையக பிரதிநிதிகள் உள்ளார்கள். சம்பள விவகாரத்தில் எமது மலையக மக்களுக்கு உண்மையை குறிப்பிடுங்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்ட எமது மக்கள் கடந்த 200 ஆண்டு காலமாக தமது உழைப்பின் ஊடாக இந்த நாட்டுக்கு அதிக வருமானத்தை தேடிக் கொடுத்துள்ளார்கள். இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாக உழைத்த போதும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடையவில்லை. அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்குவதிலும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கு எவ்வாறு சாதகமான தீர்வு காணலாம் என்று ஆராய்வதற்கு பதிலாக எவ்வாறு கோரிக்கைகளை தட்டிக்கழிக்கலாம் என்பதற்கு மாத்திரமே அதிக அவதானம் செலுத்தப்படுகிறது. இது இன்றுவரை தொடர்கிறது. என்று எனது நண்பரான ஜீவன் தொண்டமான் சார்பில் அவரது கருத்தை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
பெருந்தோட்ட மக்களின் சம்பளம் ஆரம்பத்தில் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு பின்னர் 1700 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தோட்டக் கம்பனிகள் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதனைத் தொடர்ந்து 1700 ரூபா தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டு, சம்பள நிர்ணய சபை ஊடாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய மக்கள் சக்திக்கு சார்பான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தேர்தல் காலத்தில் 2,136 ரூபாய் நாட் சம்பளம் பற்றி குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று ஜனாதிபதியின் உரையில் 1,700 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த நிலைப்பாட்டுக்கும், தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.
தேசிய மக்கள் சக்தியை நம்பி பெருந்தோட்ட மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளார்கள். இருப்பினும் இந்த அரசாங்கமும் மலையக மக்களை ஏமாற்றுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறைந்தபட்சம் சம்பள விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டைக்கூட குறிப்பிடவில்லை.
159 பெரும்பான்மையில் ஒன்றாகவே மலையக மக்களின் ஆதரவை அரசாங்கம் கருதுகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடினமாக உழைக்கும் எமது மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கரிசனை கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பெருந்தோட்ட மக்கள் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெருந்தோட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியை விரட்டி அடிப்பார்கள். மலையகத்தை அரசாங்கம் இழக்கும். பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனத்திற் கொள்ளாமல் இருப்பதை தட்டிக்கேட்க தற்றுணிவு இல்லாதவர்களாகவே ஆளும் தரப்பின் மலையக பிரதிநிதிகள் உள்ளார்கள்.
கட்சியின் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாத நிலையில்தான் ஆளும் தரப்பின் மலையக பிரதிநிதிகள் உள்ளார்கள். பெருந்தோட்ட மக்கள் இன்றும் தோட்ட நிர்வாகத்தினால் அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள். அவர்களின் உரிமைகள் முடக்கப்படுகிறது, பறிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவர்களுக்கான காணி உரிமையை கேட்கிறோம்.
அமைச்சர் சரோஜா போல்ராஜ் இவ்விடயத்தை அரசாங்கத்திடம் குறிப்பிட வேண்டும். வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்டு மலையக மக்களை ஏமாற்றக் கூடாது என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment