(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்கியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது 1700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மைத்தன்மை என்னவென்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து செயற்பட முடியாது என்பதை நன்கு அறிந்தே தேசிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டது.
ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உண்மைத்தன்மையுடன் செயற்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
159 பெரும்பான்மை உள்ளதால் அரசாங்கம் எவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்காமல் செயற்பட்டு தீர்மானங்களை எடுக்கிறது. இதன் காரணமாக தேசிய கொள்கை சபை ஒன்றை நியமிக்குமாறு யோசனை ஒன்றை கொண்டுவந்தேன்.
இந்த சபை ஜனாதிபதியின் விடயதானத்துக்குள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். இருப்பினும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
அரச இயந்திரத்தை பலமுடையதாக்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு காணப்படுமாயின் தேசிய கொள்கை சபையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கிறோம்.
அரச பழிவாங்கல் பற்றி தற்போது பேசப்படுகிறது. இதற்கு ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். அரசியல் பழிவாங்களுக்கு அச்சமடைந்து அரச சேவையாளர்கள் சேவை கட்டமைப்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்நிலைமை நீடித்தால் அரச சேவை கட்டமைப்பு முழுமையாக பலவீனமடையும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் வழங்கவில்லை. இதனை வரவேற்கிறோம். இருப்பினும் எமது அரசாங்கத்தின் அரச சேவையில் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்றுத்துறையினருக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கபபட்டது. ஆனால் தற்போது ஏதும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 1700 ரூபாய் வழங்கினார். இந்த 1700 ரூபாய் போதாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால் தற்போது 1700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மைத்தன்மை என்ன?
வைத்தியர்களுக்கு 1980 ஆம் ஆண்டு முதல் மேலதிக கடமைக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதனை நீக்க வேண்டாம் என்றே வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் எவருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆகவே தன்னிச்சையாக செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
No comments:
Post a Comment