நிறைவுக்கு வருகிறது கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை - News View

About Us

About Us

Breaking

Monday, April 28, 2025

நிறைவுக்கு வருகிறது கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கும் சேவை, அடுத்த மாதம் முதல் இயல்பு நிலைக்கு திரும்புவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், செயற்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால், தேங்கிக்கிடந்த கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

”நீடிக்கப்பட்ட இந்த சேவை, கடவுச்சீட்டுக்களை வழங்கலை சீராக்க உதவியதுடன், நீண்ட வரிசைகள் மற்றும் தாமதங்களைக் குறைக்க பெரிதும் உதவியதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

24 மணி நேர சேவை, நிலுவையிலிருந்த கடவுச்சீட்டுக்களை வழங்கும் பணிகளை சீராக்கியுள்ளதுடன், தற்போது திணைக்களத்தின் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதை தம்மால் அவதானிக்க முடிவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாம் தொடர்ந்தும் 24 மணி நேர சேவையை முன்னெடுக்கின்றோம். மேலும் ஒரு மாதத்திற்கு நிலைமையைக் அவதானிப்போம். விடயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினால், எம்மால் நிலையான 08 மணி நேர சேவைக்குத் திரும்பக் கூடியதாகயிருக்கும்.

யாழ்ப்பாணத்தில், குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலக கிளையை திறப்பதைப் பொறுத்து இது தொடர்பான இறுதி முடிவு அமைந்திருக்கும். 

பொதுமக்களுக்கு உறுதியளித்தவாறு தற்போதைய கட்டவுச்சீட்டு வழங்கும் செயல்முறை திறமையாக இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கைகள் சுமூகமாக கையாளப்படுகிறது. 

தற்போது கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசைகள் இல்லை. இதனிடையே, பயண ஆவணங்களை நவீனமயமாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை அமைச்சு எடுக்கவுள்ளது. 

அடுத்த வாரம் இ-கடவுச்சீட்டுக்களை (e-passports) வாங்குவதற்கான விளம்பரங்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகவூர்வ வெளியீட்டு திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அனைத்தும் திட்டத்தின்படி நடந்தால், இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இ-கடவுச்சீட்டுக்களை வழங்கக் கூடியதாகயிருக்கும்.

இது தொடர்பாக, குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் தொழில்நுட்ப விவரங்கள் வழங்கப்படும். இ-கடவுச்சீட்டுக்களை இறக்குமதி செய்வது தொடர்பாக சட்டமா அதிபர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment