(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. ஏன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட திருத்தத்தை இதுவரையில் கொண்டுவரவில்லை. இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதியுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனி நபர் பிரேரணையை கொண்டுவருவதாக நான் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர் 'இல்லை அரசாங்கமே அந்த பிரேரணையை கொண்டுவருவதாக' குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. ஏன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட திருத்தத்தை இதுவரையில் கொண்டுவரவில்லை. இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கல்முனை வடக்கு பிரதேச சபை தொடர்பில் தொடர்ச்சியாக கேள்வியெழுப்புகிறார். பொது நிர்வாக அமைச்சர் இதுவரையில் பதிலளிக்கவில்லை. கல்முனையில் வாழும் தமிழ் மக்கள் இதனை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு விவகாரத்தில் அரசாங்கத்தால் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாவிடின் பதிலளியுங்கள். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்கள் தொகை செறிவாக உள்ள பகுதிகளின் பிரதேச செயலக பிரிவுகளை இரண்டாக வேறுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment