(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் இதுவரையில் நிர்ணயிக்கப்படவில்லை. பானம்பலன ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பொது நிர்வாக அமைச்சு ஊடாக விசேட குழு ஒன்றை நியமித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு நாட்டின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் பல பிரச்சினைகள் பல ஆண்டுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றவையல்ல, இவைகள் நீண்டகால பிரச்சினைகளாகும்.
கடந்த ஆட்சி காலங்களில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதற்காக தற்போதும் அவற்றை நீட்டித்துக் கொண்டு செல்வது நல்லதல்ல.
நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்து அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே காலம் காலமாக நீளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் இதுவரையில் நிர்ணயிக்கப்படவில்லை. பானம்பலன என்ற ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் சிபாரிசுகளை முன்வைத்திருந்தது. இந்த சிபாரிசுகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறுப்பட்ட பகுதிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையிலும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் பிரதேச சபை இன்றளவில் உருவாக்கப்படவில்லை.
பிரதேச சபை உருவாக்கப்படாமல், எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல் நிர்வாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே பானம்பலன ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களின் எல்லைகள் இன்றளவில் நிர்ணயிக்கப்படவில்லை. நிர்வாகம் ஒரு செயலகம், காணி ஒரு செயலகம் என்று யுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளால் குளறுபடிகள் தோற்றம் பெற்றுள்ளன.
பொது நிர்வாக அமைச்சு ஊடாக விசேட குழு ஒன்றை நியமித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
No comments:
Post a Comment