அதிகார பகிர்வின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் : வலது கையில் வழங்கி இடது கையால் பறிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகிறது - ஸ்ரீநேசன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

அதிகார பகிர்வின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் : வலது கையில் வழங்கி இடது கையால் பறிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகிறது - ஸ்ரீநேசன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இனப் பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையின் அதிகாரங்களை வலது கையில் வழங்கி இடது கை ஊடாக பறிக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகிறது. ஒற்றையாட்சி முறைமை இந்த நாட்டில் தோல்வியடைந்துள்ளது. சமஸ்டியாட்சி முறைமை ஊடான அதிகார பகிர்வின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, மாகாண சபை முறைமை தொடர்பில் விசேடமாக அவதானத்திற் கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை 37 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இருப்பினும் இந்த மாகாண சபை முறைமையின் தற்போதைய நிலைமையை ஆராய வேண்டும்.

மாகாண சபைக்கு உரித்தாக்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. மொழிவாரியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும். ஓராண்டின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாக்கெடுப்பு ஊடாக இணைப்பு பற்றி சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து. அதுவும் நடக்கவில்லை. பிரிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும சட்டத்தின் ஊடாக மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் பறித்துள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் இல்லை. அதிகாரங்கள் பரவலாக பறிக்கப்பட்டுள்ளன. இணைப்பும் இல்லை. கல்வி, சுகாதாரம் மற்றும் வீதி ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மத்திய மற்றும் மாகாணங்களுக்கு என்று பிரிக்கப்பட்டுள்ளன.

மாகாண சபைகளுக்க ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு மிகவும் குறைவானதாக காணப்படுகிறது. இதனால் மாகாண பாடசாலைகள், வைத்தியசாலைகள் மனித மற்றும் பௌதீக வளப் பற்றாக்குளைக்கு உள்ளாக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டுள்ளன. மாகாண அதிகார சபையால் நிர்வகிக்கப்படும் வீதிகளும் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் காணப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை நொண்டி முறைமையாக காணப்படுகிறது. முறைமை பலவீன்படுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இனப் பிரச்சினைக்கு தீர்வாகவும், அதிகார பகிர்வாகவும் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை தற்போது முழுமையாக முடக்கி விடப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு சாறு பிழியப்பட்ட சக்கை போன்றே மாகாண சபை முறைமை இன்று காணப்படுகிறது. தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களையும், பணிகளையும் பகிர்ந்தளிக்காது தீர்வு காண முடியாது.

அந்தந்த மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாக பகிர்ந்தளித்திருந்தால் இந்த நாடு இன்று வங்குரோத்து நிலையடைந்திருக்காது. மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாறினால்தான் நிதியை பெற முடியும் என்று தற்போது குறிப்பிடப்படுகிறது. வலது கையால் கொடுத்த அதிகாரங்களை இடது கையால் பறித்தெடுக்கும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

லெனின் கொள்கைக்கு அமைய செயற்படுவதாக குறிப்பிடும் இந்த அரசாங்கம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிர்ந்தளித்தால்தான் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அபிவிருத்தியடைய முடியும்.

நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை இந்த நாட்டில் தோல்வியடைந்துள்ளது. ஒற்றையாட்சியால் இன நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியவில்லை. சர்வதேச மட்டத்தில் சிறந்த நிலையையும் பெற முடியவில்லை.

மொத்தமாக சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முறைமையில் ஒற்றையாட்சி முறைமை தோல்வியடைந்துள்ளது. ஆகவே முறையான அதிகார பகிர்வில்லாமல் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் முடியாது.பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியாது என்றார்.

No comments:

Post a Comment