இருந்ததும் இல்லாமல் போய்விட்டதென அரச சேவையாளர்கள் குறிப்பிடுகிறார்கள் : உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்துக்கு சவால்மிக்கது - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

இருந்ததும் இல்லாமல் போய்விட்டதென அரச சேவையாளர்கள் குறிப்பிடுகிறார்கள் : உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்துக்கு சவால்மிக்கது - ரோஹித அபேகுணவர்தன

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, இருந்ததும் இல்லாமல் போய்விட்டது என்று அரச சேவையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். யார் குறிப்பிடுவது உண்மை. புத்தாண்டுக்கு முன்னர் உண்மையை தெரிந்துகொள்ள முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்துக்கு சவால்மிக்கது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படவில்லை. வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெறும் தினத்தன்று வாக்கெடுப்பு திகதியை அறிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தாமதப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. விரைவாக திகதியை அறிவியுங்கள்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தும். தேசிய மக்கள் சக்தி இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. ஆகவே இந்த தேர்தல் அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானது.

அரசாங்கத்தின் குறை, நிறைகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். பேசுவதை குறைத்து விட்டு செயற்படுங்கள் என்று அரசாங்கத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எதிர்வரும் 15 ஆம் திகதி காட்டு விலங்குகளை கணக்கெடுப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. அரச அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை அரசியல்வாதிகள் செய்தால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இருந்ததும் இல்லாமல் போய்விட்டது என்று அரச சேவையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். யார் குறிப்பிடுவது உண்மை. புத்தாண்டுக்கு முன்னர் உண்மையை தெரிந்து கொள்ள முடியும்.

அரசாங்கம் குறிப்பிடுவதைப் போன்று சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரச சேவையாளர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். பொய்யுரைத்திருந்தால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள். ஆகவே இடம்பெறவுள்ள தேர்தல் அரசாங்கத்துக்கு தீர்மானமிக்கது என்றார்.

No comments:

Post a Comment