தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு 114 மேலதிக வாக்குகளினால் இன்று (21) சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று பி.ப 7.40 க்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. ரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் இன்று மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்றது.
மேலும், பாராளுமன்றத்தில் இன்று (21) நிறைவேற்றப்பட்ட 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானமாக 4990 பில்லியன் ரூபாவும் செலவீனமாக 7190 பில்லியன் ரூபாவும் துண்டுவிழும் தொகையாக 2200 பில்லியன் ரூபாவும் காணப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை 7 நாட்கள் இடம்பெற்று 25 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அரசாங்க தரப்பினருடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாக வாக்களித்த நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி, நாமல் ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன, ரவி கருணாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன .
அதேவேளை சிறீதரன் எம்.பி தலைமையிலான தமிழரசுக் கட்சியும், சுயேட்சைக் குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான இராமநாதன் அர்ச்சுனா உட்பட 23 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திற்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் இன்று மார்ச் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விவாதம் இடம்பெற்றது
விவாதத்தின் முடிவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக எம்.பி வாக்கெடுப்பைக் கோரினார்.
அதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்பு 114 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து எதிர்க்கட்சியிலுள்ள தொழிலாளர் கட்சியினை சேர்ந்த காதர் மஸ்தான் வாக்களித்த நிலையில் எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி, நாமல் ராஜபக்ஷ் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன, ரவி கருணாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அர்ச்சுனா எம்.பி. தலைமையிலான சுயேச்சைக்குழு 17 ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.
இந்த வாக்களிப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்கவில்லை. அத்துடன் 20 எம்.பி.க்களும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment