ஹோகந்தர பிரதேசத்திலுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்து 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, 2 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார்.
அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2023.12.31ஆம் திகதி வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாத்துறை ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட 6 சந்தேகநபர்களை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவு தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்தினர்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றுமுன்தினம் சோதனையிட்டபோது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 795 மதுபான போத்தல்கள், 214 வைன் போத்தல்கள் உட்பட 1009 மதுபான போத்தல்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதேபோன்று தேசபந்து தென்னக்கோன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் இரண்டு ஆப்பிள் ரக ஸ்மார்ட் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment