லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டும் : சபையில் வலியுறுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டும் : சபையில் வலியுறுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு சம்பந்தமாக சட்டமா அதிபர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து அவர் உரையாற்றும்போது பிரதமரிடம் இதனை வலியுறுத்தினார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சபையில் பிரதமர் பிரசன்னமாகியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தில் நான் இந்த விடயத்தை முன்வைக்க விரும்புகின்றேன்.

லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் சட்டமா அதிபர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த கடிதத்தில் உள்ள விடயங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் காணப்படுகின்றன.

சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமானது என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும். குறித்த கடிதம் பிரதமருக்கும் அதன் பிரதியொன்று நீதியமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் பதிலை நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment